776 சர்வதேச விக்கெட் + 98 டெஸ்ட் சிக்சர்கள் + WTC கோப்பை.. விடைபெற்றார் ’ஸ்விங் கிங்’ டிம் சவுத்தீ!
2008-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான டிம் சவுத்தீ, முதல் விக்கெட்டாக இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகனை வெளியேற்றி முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கிரிக்கெட்டில் தன்னுடைய வருகையை கெத்தாக பதிவுசெய்தார்.
ஸ்விங் கிங் என அழைக்கப்படும் டிம் சவுத்தீ அதற்குபிறகு தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை திரும்பி பார்க்காமல், நியூசிலாந்து அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற மகத்தான சாதனையுடன் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்காக 391 டெஸ்ட் விக்கெட்டுகள், 221 ஒருநாள் விக்கெட்டுகள், 164 டி20 விக்கெட்டுகளுடன் மொத்தமாக 776 சர்வதேச விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இரண்டாவது இடத்தில் 696 விக்கெட்டுகளுடன் டேனியல் விட்டோரி நீடிக்கிறார். 700 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே நியூசிலாந்து பவுலராகவும் டிம் சவுத்தீ ஒருவரே வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வை அறிவித்த டிம் சவுத்தீ..
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஓய்வை அறிவித்த டிம் சவுத்தீ, ஒருவேளை நியூசிலாந்து அணி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப்போட்டிக்கு முன்னேறினால் இறுதிப்போட்டியில் பங்கேற்பேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை தவறவிட்டிருக்கும் நிலையில், செவ்வாய் கிழமையான இன்று ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 443 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வெற்றியோடு கிரிக்கெட் பயணத்தை முடிப்பது மிகவும் சிறப்புமிக்கது என சவுத்தீ தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 391 விக்கெட்டுகள், 98 சிக்சர்கள் என பதிவுசெய்திருக்கும் டிம் சவுத்தீ, 400 விக்கெட்டுகளாகவும், 100 சிக்சர்களாகவும் முடிக்க முடியாதது குறித்து வருத்தத்தையும் பதிவுசெய்தார். எப்படியிருப்பினும் நியூசிலாந்தின் தலைசிறந்த பவுலராக முடித்திருக்கும் டிம் சவுத்தீ, நியூசிலாந்தின் ஜாம்பவான் பந்துவீச்சாளர் ரிச்சர்ட் ஹார்ட்லியிடமிருந்து நினைவு பரிசை பெற்றுக்கொண்டார். நியூசிலாந்துக்காக அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் (431 விக்கெட்டுகள்) ரிச்சர்ட் ஹார்ட்லியும், இரண்டாவது இடத்தில் (391 விக்கெட்டுகள்) டிம் சவுத்தீ நீடிப்பதும் குறிப்பிடத்தக்கது.
டிம் சவுத்தீயின் சாதனைகள்..
முதல் பவுலர் - நியூசிலாந்துக்காக அதிக சர்வதேச விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் டிம் சவுத்தீ. 776 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
2வது பவுலர் - நியூசிலாந்துக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரிச்சர்ட் ஹார்ட்லிக்கு பிறகு 391 விக்கெட்டுகளுடன் 2வது பவுலராக டிம் சவுத்தீ நீடிக்கிறார்.
98 சிக்சர்கள் - டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் அடித்த ஒரே பவுலர் மற்றும் ஒட்டுமொத்தமாக 4வது வீரராகவும் டிம் சவுத்தீ நீடிக்கிறார். அதிக டெஸ்ட் சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அதிரடி வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையையும் சமன்செய்துள்ளார்.
WTC கோப்பை - டிம் சவுத்தீ தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் விதமாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூசிலாந்துக்கு பெற்று தந்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான இறுதிப்போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் டிம் சவுத்தீ.
உலக சாதனை - டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடிக்காமல் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற உலக சாதனையை டிம் சவுத்தீ படைத்துள்ளார். சதமடிக்காமல் ஒரு வீரர் கூட 50 சிக்சர்களை கூட நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.