2024-2025 விஜய் ஹசாரே கோப்பை தொடரானது 2024 டிசம்பர் 21 முதல் தொடங்கி 2025 ஜனவரி 18ம் தேதிவரை நடைபெறுகிறது. 38 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 21-ம் தேதி முதல் பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் 5 போட்டிகளில் விளையாடி ஐந்திலும் வெற்றிபெற்றிருக்கும் விதர்பா அணியில், கேப்டனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் கருண் நாயர் 5 போட்டிகளில் 4 சதங்களை பதிவுசெய்தது மட்டுமில்லாமல், அவுட்டே ஆகாமல் அதிக ரன்களை குவித்து லிஸ்ட் ஏ போட்டிகளில் புதிய வரலாற்று சாதனையை பதிவுசெய்துள்ளார்.
2024-2025 விஜய் ஹசாரே டிரோபியில் விதர்பா அணியை கேப்டனாக வழிநடத்தும் கருண் நாயர், தொடர்ந்து 5 போட்டிகளில் அவுட்டே ஆகாமல் 112*, 44*, 163*, 111* மற்றும் 112 ரன்கள் என 4 சதங்களை விளாசி 542 ரன்களை குவித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
இதன்மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அவுட்டே ஆகாமல் அதிக ரன்கள் குவித்திருந்த நியூசிலாந்தின் ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பிராங்க்ளின் வரலாற்று சாதனையை கருண் நாயர் முறியடித்துள்ளார். அவர் தொடர்ந்து அவுட்டே ஆகாமல் 527 ரன்கள் குவித்திருந்ததே முந்தைய சாதனையாக நீடித்துவந்தது. இந்தப்பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் ஜோசுவா வான் ஹெர்டன் (512 ரன்கள்), ஃபகர் ஜமான் (455 ரன்கள்) மற்றும் தௌஃபீக் உமர் (422 ரன்கள்) முதலியோர் நீடிக்கின்றனர்.
அவுட்டே ஆகாமல் அசத்திவந்த கருண் நாயரின் ஆட்டம் நேற்று நடந்த உத்தரபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 112 ரன்னுக்கு அவுட்டானதுடன் முடிவுக்கு வந்தது. 5 போட்டிகளில் விளையாடி 5 போட்டியிலும் வென்றிருக்கும் நாயர் தலைமையிலான விதர்பா அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.