”எங்களால் ஆஸி. அணியை ஆல்அவுட் செய்ய முடியும்..” - பிட்ச் சாதகம் குறித்து பிரசித் கிருஷ்ணா!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. பரபரப்பாக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவி 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 2-2 என சமன் செய்யும் முயற்சியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்கும் முயற்சியிலும் இந்தியா இறங்கியுள்ளது.
பரபரப்பாக தொடங்கப்பட்ட 5வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்களும், ஆஸ்திரேலியா 181 ரன்களும் எடுத்த நிலையில், இந்தியா 141/6 என்ற நிலையில் விளையாடிவருகிறது.
ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியும்..
இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 200+ ரன்களை இந்தியா எட்டிவிட்டால் போட்டியை வெல்வதற்கான வாய்ப்பு இருக்கும் பட்சத்தில், ஆஸ்திரேலியாவை தங்களால் ஆல் அவுட் செய்ய முடியும் என்று பிரசித் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்திற்கு பிறகு பேசிய பிரசித் கிருஷ்ணா, ”போட்டியில் வெல்ல இவ்வளவு குறிப்பிட்ட ரன்கள் எடுத்தால் போதும் என்ற மனநிலை இல்லை, ஆனால் இங்கிருந்து எங்களால் எவ்வளவு ரன்கள் எடுக்க முடிந்தாலும் மகிழ்ச்சி தான். எங்களால் ஆஸ்திரேலியாவை ஆல்அவுட் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஆடுகளத்தில் சில இடத்தில் பிட்ச் செய்தால் பந்து உயரம் குறைவாகவும், சில இடங்களில் பிட்ச் செய்தால் நல்ல பவுன்சரும் எழுகிறது. அந்த இடங்களில் பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு இரண்டு பக்கமும் அழுத்தம் கொடுக்க முடியும். ஆடுகளத்தின் சூழலை பொறுத்தவரையில் நாங்கள் எங்கு பந்துவீச வேண்டும் என்ற திட்டங்களை அவ்வப்போது வகுத்து வருகிறோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் பிரசித் கிருஷ்ணா அபாரமாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். குறிப்பாக, நிலைத்து ஆடிய ஸ்மித் விக்கெட்டை சாய்த்தார்.