”மைக் வைத்திருப்பவர்கள் சொல்வதால் ஓய்வு பெறமுடியாது” - தடாலடியாக சொன்ன ரோகித் சர்மா! ரசிகர்கள் ஷாக்!
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. பரபரப்பாக நடந்துவரும் டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளின் முடிவி 2-1 என ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் 5வது டெஸ்ட் போட்டியில் வென்று தொடரை 2-2 என சமன் செய்யும் முயற்சியிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்கும் முயற்சியிலும் இந்தியா இறங்கியுள்ளது.
இந்த சூழலில் பேட்டிங்கில் மோசமான ஃபார்முடன் போராடிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா, அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி பும்ராவை கேப்டனாக்கியது பேசுபொருளாக மாறியது. ஒரு டெஸ்ட் தொடரின் பாதியில் ஒரு கேப்டன் நீக்கப்படுவது விமர்சிக்கப்பட்டநிலையில், ரோகித் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விரைவில் அவர் ஓய்வை அறிவித்து விடுவார் எனவும் செய்திகள் வெளியாகின.
ஓய்வை மறுத்த ரோகித் சர்மா..
சிட்னியில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் உணவு இடைவேளையின்போது நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ரோகித் சர்மா, தன்னுடைய டெஸ்ட் எதிர்காலம், ஓய்வு என வெளியான அனைத்து செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிலளித்தார்.
நேர்காணல் ஆரம்பிக்கும் போதே, இந்தியாவின் கேப்டனாக நீங்கள் ஆற்றிய சேவையை இந்திய ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள் என தொகுப்பாளர் கூற, உடனே “நான் எங்கேயும் சென்றுவிடவில்லை” என பேசிய ரோகித் சர்மா மைக் வைத்திருப்பவர்கள் எல்லாம் என்னுடைய ஓய்வை அறிவித்துவிட முடியாது என்று ஒரேயடியாக ஆஃப் செய்தார்.
அவருக்கே உரிய கலகலப்பான பாணியில் பேசிய ரோகித் சர்மா, நான் எங்கும் செல்லவில்லை, இங்கு தான் இருக்கிறேன். சிட்னி போட்டியில் இருந்து என்னை யாரும் நீக்கவில்லை. நான் ஃபார்மில் இல்லாததால் அணிக்கு எது தேவையோ அந்த முடிவை எடுத்து நானாகவே விலகினேன். மீண்டும் ஃபார்முக்கு திரும்புவேன். அடுத்த 5 மாதங்களுக்கு பிறகும் நான் மோசமாக தான் விளையாடுவேன் என்ற தீர்மானத்திற்கு யாரும் இப்போதே வந்துவிட முடியாது.
இந்த விளையாட்டை நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். நிறைய ஏற்ற இறக்கத்தை பார்த்திருக்கிறேன். எப்பொழுது செல்ல வேண்டும், எப்பொழுது விளையாட கூடாது, எப்பொழுது டக் அவுட்டில் உட்கார வேண்டும், எப்பொழுது கேப்டன்சி செய்ய வேண்டும் என்பதை இவர்கள் தீர்மானிக்க முடியாது.
வெளியில் கையில் லேப்டாப், மைக் அல்லது பேனாவை வைத்துக்கொண்டு எழுதுபவர்கள், சொல்பவர்களால் என்னுடைய ஓய்வை முடிவு செய்யமுடியாது. நான் அனுபவம் உள்ளவன், இரண்டு குழந்தைகளின் தந்தை, என் வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்” என்று கூறி ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.