kane williamson cricinfo
கிரிக்கெட்

முத்தரப்பு ODI தொடர் | 47வது சதமடித்த கேன் வில்லியம்சன்.. இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது NZ!

பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பாகிஸ்தானில் நடந்துவருகிறது.

Rishan Vengai

6 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து என மூன்று முழுநேர கிரிக்கெட் நாடுகள் முத்தரப்பு தொடரில் விளையாடுகின்றன. அதுவும் இந்த போட்டிகள் பாகிஸ்தானில் லாகூர் மற்றும் கராச்சியில் நடைபெற்றுவருகிறது.

மூன்று அணிகளும் மற்ற அணிகளோடு தலா ஒரு போட்டி என இரண்டு போட்டிகளில் மோதுகின்றன. இதில் அதிக வெற்றிகளை பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

new zealand - south africa - pakistan

அந்தவகையில் இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து..

முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த நியூசிலாந்து அணி, இரண்டாவது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடியது.

பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி, தொடக்க வீரராக அறிமுக போட்டியில் விளையாடிய மேத்யூ ப்ரீட்ஸ்கேவின் அதிரடியான சதத்தால் 304 ரன்களை குவித்தது. 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் என துவம்சம் செய்த ப்ரீட்ஸ்கே 150 ரன்கள் அடித்து, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிகரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.

305 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில், கேன் வில்லியம்சன் மற்றும் டெவான் கான்வே இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கான்வே 97 ரன்கள் அடித்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டாலும், 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என விளாசி கேன் வில்லியம்சன் 14வது ஒருநாள் சதமடித்து மிரட்டினார்.

133 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2 லீக் போட்டிகளிலும் வென்ற நியூசிலாந்து இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.

அதிவேகமாக 7000 ODI ரன்கள்..

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 14வது ஒருநாள் சதமடித்த கேன் வில்லியம்சன், தன்னுடைய 47வது சர்வதேசத்தை பூர்த்தி செய்தார்.

அதுமட்டுமில்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த கேன் வில்லியம்சன், அதிவேகமாக இந்த சாதனையை செய்த இரண்டாவது வீரராக சாதனை படைத்தார்.