2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடக்கவிருக்கும் போட்டிக்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்தியாவிற்கு எதிராக ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோற்றதே இல்லை என்ற ரெக்கார்டு உடன் நியூசிலாந்தும், ரோகித் சர்மா தலைமையில் ஐசிசி போட்டிகளில் நியூசிலாந்திடம் தோல்வியே கண்டதில்லை என்ற ரெக்கார்டு உடன் இந்தியாவும் களம்காண்கின்றன.
இந்நிலையில் 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2021 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் கேப்டனாக தோல்வியை கண்ட கேன் வில்லியம்சன், 2025 சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்து அணிக்காக கோப்பை வெல்லும் முயற்சியில் களம்காண உள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சதமடித்த கேன் வில்லியம்சன், இந்தியாவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் 81 ரன்கள் அடித்திருந்தார். அவருடைய சிறந்த ஃபார்ம் இந்திய அணிக்கு நிச்சயம் கவலைக்குரிய விஷயமாக இருக்கப்போகிறது.
இந்நிலையில் சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் கேன் வில்லியம்சன், அவர் எதிர்கொண்டதிலேயே கடினமான பவுலர் யார் என்ற கேள்விக்கு ஜஸ்பிரித் பும்ராவை தேர்ந்தெடுத்துள்ளார்.
அதேபோல கடினமான பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்விக்கு சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் விராட் கோலியின் பெயரை குறிப்பிட்டுள்ளார் வில்லியம்சன்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் கேன் வில்லியம்சன் தன் திறமையை வெளிக்காட்ட தயாராகவே இருக்கிறார்.