இந்தியாவிற்கு துபாய் ஆடுகளம் நன்றாக தெரியும்.. ஆனால் நாங்கள் வெல்வோம்! - சாண்ட்னர்..!
2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியானது துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் மார்ச் 9-ம் தேதி நடக்கவிருக்கிறது. 2002 மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற இந்திய அணி 3வது கோப்பைக்காக களம்காண உள்ளது. அதேவேளையில் 2000 ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நியூசிலாந்து அணி இரண்டாவது கோப்பைக்காக களம்புக உள்ளது.
நடப்பு தொடரில் இந்திய அணி ஒருதோல்வி கூட அடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது, நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் மட்டுமே தோற்றுள்ளது.
இந்த சூழலில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கு ஆடுகளம் நன்றாக தெரியும்..
போட்டிக்கு முன்னதாக பேசியிருக்கும் நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், “நடப்பு சாம்பியன்ஸ் டிராபி முழுவதும் நல்ல அணிகளுக்கு எதிராக சவால்களை எதிர்கொண்டு விளையாடியுள்ளோம். இந்தியாவுக்கு எதிரான போட்டியிலிருந்தும் நல்ல அனுபவத்தை பெற்றிருக்கிறோம். அதை அவர்களுடனான இறுதிப்போட்டியில் எடுத்துச்சென்று ஃபைனல் லைனை கடக்க முயற்சிப்போம்.
இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியுள்ளது. அதனால் அவர்களுக்கு ஆடுகளங்கள் எங்களை விட நன்றாக தெரியும். லாகூரில் இருந்ததை விட, துபாயில் ஆடுகளம் சற்று மெதுவாக இருக்கும். அதை எங்கள் வீரர்கள் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறார்கள். ஒரே அணியாக இணைந்து எதிரணியின் மீது நெருக்கடி செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டம்.
இந்திய அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறுதி போட்டியில் டாஸ் வெல்ல வேண்டியதும் முக்கிய பங்குவகிக்கும் என நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.