இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் சேர்த்தது.
அதனைத்தொடர்ந்து விளையாடிவரும் இங்கிலாந்து அணி 500 ரன்களுக்கு மேல் குவித்து பேட்டிங் செய்துவருகிறது. அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் ஜோ ரூட் 150 ரன்கள் குவித்து வெளியேறினார்.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
38வது டெஸ்ட் சதம்:
இந்தியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் அடித்த ஜோ ரூட், தன்னுடைய 38வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (51), ஜேக் காலீஸ் (45), ரிக்கி பாண்டிங் (41) முதலியவர்களுக்கு பிறகு 4வது இடத்தை பிடித்து சங்ககரா (38) சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
டான் பிராட்மேன் சாதனை முறியடிப்பு:
அதுமட்டுமில்லாமல் இந்தியாவிற்கு எதிராக சொந்த மண்ணில் 9-வது டெஸ்ட் சதமடித்த ஜோ ரூட், டான் பிராட்மேன் சாதனையை முறியடித்தார்.
டான் பிராட்மேன் அவருடைய சொந்த மண்ணான ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 8 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்த நிலையில், ஜோ ரூட் அதனை முறியடித்து அசத்தியுள்ளார்.
சச்சின் சாதனை மட்டுமே மீதம்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2-ம் இடத்திலிருந்த ரிக்கி பாண்டிங்கை (13378 ரன்கள்) பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் சாதனை படைத்தார்.
ஜோ ரூட் 13409* ரன்கள் குவித்திருக்கும் நிலையில், சச்சின் டெண்டுல்கர் 15921 ரன்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.