எங்கள் வீரர்கள் இந்திய ஜெர்சியை அணியவேண்டும் என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உருக்கம் web
கிரிக்கெட்

’66 ஆண்டுகால கனவு.. எங்கள் வீரர்கள் இந்திய ஜெர்சியை அணியவேண்டும்’ - ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உருக்கம்

எங்கள் வீரர்கள் இந்திய ஜெர்சியை அணிய வேண்டிய நேரம் வந்துவிட்டது என ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.

Rishan Vengai

ஜம்மு-காஷ்மீர் அணி 66 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியை எட்டியது. முதல்வர் உமர் அப்துல்லா, வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என உணர்ச்சியுடன் தெரிவித்தார். கர்நாடகாவை வீழ்த்தும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் 477 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

1959-60ஆம் ஆண்டு நடைபெற்ற ரஞ்சிக்கோப்பை தொடரில் முதன்முறையாக பங்கேற்ற ஜம்மு-காஷ்மீர் அணி, 66 சீசன்களாக ஒருமுறை கூட இறுதிப்போட்டியை எட்டியதில்லை. ஆனால் 66 ஆண்டுகளுக்கு பிறகு 2026 சீசனில் முதல்முறையாக ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டியை எட்டியிருக்கும் ஜம்மு-காஷ்மீர் அணி, பலம் வாய்ந்த கர்நாடகாவை வீழ்த்தும் நிலையில் தற்போது உள்ளது.

முதல்முறையாக ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஜம்மு-காஷ்மீர்

பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் தரமான கிரிக்கெட்டை விளையாடிவரும் ஜம்மு-காஷ்மீர் அணி, தற்போது இந்திய அணியில் விளையாடிவரும் கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, மயங்க் அகர்வால் முதலிய நட்சத்திர வீரர்கள் அடங்கிய கர்நாடகா அணியை திணறடித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் - கர்நாடகா

பரபரப்பாக நடந்துவரும் இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்திருக்கும் ஜம்மு-காஷ்மீர், கர்நாடகாவை முதல் இன்னிங்ஸில் 293 ரன்னில் சுருட்டி அசத்தியது. 291 ரன்கள் முன்னிலை பெற்ற ஜம்மு-காஷ்மீர் அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 477 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் கடைசி நாளில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

எங்கள் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற வேண்டும்..

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றியின் பக்கம் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு ஆதரவு தெரிவிக்க போட்டி நடைபெறும் கர்நாடகாவிற்கு வருகை தந்திருக்கும் ஜம்மு-காஷ்மீர் முதல் உமர் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீர் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஞ்சி டிராபியின் இறுதிப் போட்டிக்கு ஜம்மு-காஷ்மீர் எட்டுவது எங்களுக்கு மிகவும் சிறப்புவாய்ந்த தருணம், ஏனெனில் இதுவே முதல் முறை. ஆனால் இறுதிக்கட்டத்தைத் தாண்டிச் செல்ல முடியாது என்று பலர் கூறினர். ஆனால் முதல் இன்னிங்ஸில் அவர்கள் செயல்பட்ட விதத்தைப் பார்த்தால், இங்கிருந்து கோப்பையை வெல்ல நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் வீரர்கள் நாட்டிற்காக விளையாட அழைக்கப்பட வேண்டிய அல்லது கேட்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். தற்போதைய அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவர் அல்லது இருவர் நிச்சயமாக இந்திய ஜெர்சியை அணியத் தகுதியானவர்கள்” என்று உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.