ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல்அவுட்டான இந்திய அணியை, தன்னுடைய அசாத்தியமான பேட்டிங் திறமையால் 161 ரன்கள் குவித்து 295 ரன்கள் வித்தியாசத்திலான மாபெரும் வெற்றிக்கு அழைத்துச் சென்றார் ஜெய்ஸ்வால்.
22 வயதேயான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகாலையில் அதிகப்படியான ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆகக்கூடிய புதிய பந்திலும், ஸ்பின்னர்களுக்கு எதிராகவும், ரிவர்ஸ் ஸ்விங் ஆகக்கூடிய பழைய பந்திலும் என மூன்று விதமான பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக தன்னை தகவமைத்துக் கொண்டார். 297 பந்துகளை எதிர்கொண்டு களத்தில் இருந்த அவரை எந்த ஆஸ்திரெலியா பவுலராலும் வெளியேற்ற முடியவில்லை. கட்ஷாட் அடிக்க முயன்ற ஜெய்ஸ்வால் பாய்ண்ட் திசையில் கேட்ச் கொடுத்து தானாக வெளியேறியதால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் அவருடைய விக்கெட்டை வீழ்த்த முடிந்தது.
இந்நிலையில் ஐசிசி பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
ஐசிசியின் சமீபத்திய தரவரிசை பட்டியலின் படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 8 விக்கெட்டுக்கள் வீழ்த்திய பும்ரா டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்திற்கும், 161 ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் நம்பர் 2 இடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளார்.
முதல்முறையாக 20 இடங்களை விட்டு டெஸ்ட் தரவரிசையில் வெளியேறிய விராட் கோலி, 30வது டெஸ்ட் சதத்திற்கு பிறகு 9 இடங்கள் முன்னேறி 13வது இடத்தை பிடித்துள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர் மற்றும் டி20 ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா முதலிடத்தை பிடித்துள்ளனர்.
டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் ஜோ ரூட்டிற்கு போட்டியாக ஜெய்ஸ்வால் உருவெடுத்துள்ளார். இருவருக்கும் இடையேயான ரேட்டிங் புள்ளிகள் 78ஆக இருந்துவருகின்றன. ஜெய்ஸ்வால் தொடர்ந்து இதே ஃபார்மை வெளிப்படுத்தும் பட்சத்தில் விரைவில் ஜோ ரூட்டின் நம்பர் 1 இடத்தை தட்டிப்பிடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.