காலே டெஸ்டில் இலங்கையை 284 ரன்னுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா, 178 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகள் என்ற அபூர்வ இரட்டை சாதனையை எட்டிய 4வது வீரராக உலக வரலாற்றில் இணைந்துள்ளார்; கபில் தேவ், போத்தம், வெட்டோரி வரிசையில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை - இந்தியா அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இலங்கை மண்ணில் நடந்துவருகிறது. காலே மைதானத்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்கள் அடித்த நிலையில், இலங்கை அணி 284 ரன்கள் சேர்த்துள்ளது. 3ஆம் நாள் ஆட்டமுடிவில் 178 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, மறுநாள் பேட்டிங் செய்யவிருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்தியாவின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இலங்கை கேப்டன் தனஞ்செயாவை 22 ரன்னில் வெளியேற்றிய ஜடேஜா, சதமடித்த சோனல் துனுஷியாவை 101 ரன்னில் அவுட்டாக்கி அசத்தினார்.
இந்தப்போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 3 பேர் மட்டுமே படைத்த சாதனையை 4வது வீரராக படைத்து அசத்தினார். 4000 டெஸ்ட் ரன்களை அடித்திருக்கும் ஜடேஜா 350 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
4000 டெஸ்ட் ரன்கள் + 350 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:
கபில் தேவ் - 5248 ரன்கள் + 434 விக்கெட்டுகள் - இந்தியா
இயன் போத்தம் - 5200 ரன்கள் + 383 விக்கெட்டுகள் - இங்கிலாந்து
டேனியல் வெட்டோரி - 4531 ரன்கள் + 362 விக்கெட்டுகள் - நியூசிலாந்து
ரவீந்திர ஜடேஜா - 4108 ரன்கள் + 350 விக்கெட்டுகள் - இந்தியா
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகளை கைப்பற்றிய 5வது இந்திய வீரராக சாதனை படைத்தார் ஜடேஜா.
அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்திய இந்தியர்கள்:
அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 537 விக்கெட்டுகள்
கபில் தேவ் - 434 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 417 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா - 350 விக்கெட்டுகள்*
3வது இடதுகை ஸ்பின்னர்:
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 350 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இடதுகை ஸ்பின்னராகவும் சாதனை படைத்துள்ளார் ஜடேஜா.
இடது கை ஸ்பின்னர்கள் டெஸ்ட் விக்கெட்டுகள்:
433 - ரங்கன ஹேரத்
362 - டேனியல் வெட்டோரி
350* - ரவீந்திர ஜடேஜா