பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இஷான் கிஷன் இல்லை web
கிரிக்கெட்

BCCI வருடாந்திர ஒப்பந்தம்| மீண்டும் இஷானுக்கு இடமில்லை.. B கிரேடுக்கு தரமிறக்கப்பட்ட கோலி, ரோகித்!

பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தப்பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் A+ பிரிவில் இடம்பெற்றிருந்த ரோகித், கோலி இருவரும் கிரேடு பி-க்கு தரமிறக்கப்பட்டுள்ளனர்.

Rishan Vengai

பிசிசிஐயின் புதிய ஒப்பந்த பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி B கிரேடுக்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர். இளம் வீரர் இஷான் கிஷனுக்கு மீண்டும் ஒப்பந்தத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

2024 டி20 உலகக்கோப்பையை இந்தியாவிற்காக வென்றபிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 வடிவத்திலிருந்தும், பின்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்தனர்.

அதற்குபின்னர் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை வரை விளையாடும் திட்டத்தில் இருக்கின்றனர்.

ரோகித் சர்மா - விராட் கோலி

ஆனால் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு மற்றும் கம்பீர் தரப்பு இளம் வீரர்களை தயார் படுத்தும் எண்ணத்தில் இருந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்கான உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி தங்களுடைய ஃபார்மை நிரூபித்துள்ளார் கோலி மற்றும் ரோகித் இருவரும்.

இந்தசூழலில் பிசிசிஐயின் வருடாந்திர மத்திய ஒப்பந்தப் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் B கிரேடுக்கு தரம் கீழறக்கப்பட்டுள்ளனர்.

தரம் இறக்கப்பட்ட ரோகித், கோலி!

நடப்பாண்டுக்கான பிசிசிஐயின் வருடாந்திர மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், முந்தைய ஆண்டு இருந்த A+ கிரேட் நீக்கப்பட்டுள்ளது. முதல்நிலையான A கிரேடில் இந்திய கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜடேஜா 3 பேரும் இடம்பிடித்துள்ளனர்.

B கிரேடில், வாஷிங்டன் சுந்தர், ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயார் ஐயர் இடம்பெற்றுள்ளனர்.

C கிரேடில், அக்சர் பட்டேல், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரெல், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஸ்னாய், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

முந்தைய ஆண்டு ஒப்பந்தத்தில் A+ கிரேடில் இடம்பெற்றிருந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கிரேட் பி-க்கு தரம் இறக்கப்பட்டுள்ளனர்.

இஷான் கிஷனுக்கு வாய்ப்பு இல்லை..

அறிவிக்கப்பட்டிருக்கும் 2025-26ஆம் ஆண்டுக்கான பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் மீண்டும் இஷான் கிஷன் சேர்க்கப்படவில்லை.

2023-24 சீசனுக்கான மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இஷான், ஷ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டு மீண்டும் அணிக்கு திரும்பினர். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை ஒப்பந்தத்தில் சேர்த்த பிசிசிஐ, இஷான் கிஷனை இன்னும் இணைக்கவில்லை.

தற்போது டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்து சிறப்பாக விளையாடினாலும் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.