தென்னாப்பிரிக்கா இந்தியாவை 25 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்தது. இந்திய அணியின் தோல்விக்கு அனுபவமின்மை, தவறான அணித்தேர்வு, டி20 மனப்பான்மை காரணமாக இருந்தது. உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் சர்பராஸ், அபிமன்யூ, ருதுராஜ் போன்றோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது, ஐபிஎல் மட்டுமே அளவுகோலா என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியாவிற்கு எதிராக விளையாடியது.. 2 போட்டிகளிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் மற்றும் 408 ரன்கள் வித்தியாசத்தில் 2 போட்டிகளையும் வென்று சொந்த மண்ணில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்தது..
2000-க்கு பிறகு 25 ஆண்டுகளாக இந்தியாவில் தொடரை வெல்லாத தென்னாப்பிரிக்கா அணி, டெம்பா பவுமா தலைமையில் வரலாற்று வெற்றியை படைத்து சாதனையை நிகழ்த்தியது..
இந்திய அணியை பொறுத்தவரை அனுபவமின்மை, நிலையான பேட்டிங் ஆர்டர் இல்லாமை, பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம், அணியில் அதிகப்படியான ஆல்ரவுண்டர்களுக்கு இடம், டெஸ்ட்டுக்கான ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் இல்லாதது, படுமோசமான அணித்தேர்வு போன்ற பல காரணங்கள் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன..
ஒரு பவுலிங் ஆல்ரவுண்டரை நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறக்கும் அளவுக்கு தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர் எண்ணம் இருப்பது அவர்கள் இன்னும் டி20 வடிவத்திலிருந்து வெளியேவரவில்லை என்பதை காட்டுகிறது..
இந்நிலையில் இந்திய அணியின் படுதோல்விக்கு பிறகு பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டுவரும் நிலையில், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கு வாய்ப்பே வழங்குவதில்லை? ஐபிஎல் மட்டும் தான் அனைத்துக்கும் அளவுகோலா? என்ற கேள்வியை முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எழுப்பியுள்ளார்..
இந்தியாவின் வரலாற்று தோல்வி குறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியிருக்கும் முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், அணியில் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் ரன்கள் குவித்துவரும் ருதுராஜ் கெய்க்வாட், முதல்தர கிரிக்கெட்டில் 70 சராசரி வைத்திருக்கும் சர்பராஸ் கான், முதல்தர கிரிக்கெட்டில் 8000 ரன்களை குவித்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரன் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.. மேலும் ஐபிஎல் தான் அனைத்துக்கும் அளவுகோலா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்..
சர்பராஸ் கான் - நியூசிலாந்துக்கு எதிராக இந்திய மண்ணில் அடைந்த படுதோல்விக்கு பிறகு சதமடித்தபோதும் சர்பராஸ்கான் நீக்கப்பட்டார்.. தொடர்ந்து அவருக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தொடர் என எதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. நிராகரிப்புக்கு உடல் எடை காரணமாக சொல்லப்பட்ட நிலையில், 17 கிலோவரை சர்பராஸ்கான் எடையை குறைத்தது குறிப்பிடத்தக்கது..
அபிமன்யூ ஈஸ்வரன் - முதல்தர கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 50 சராசரியுடன் 8000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கும் அபிமன்யூ ஈஸ்வரனுக்கு இந்திய அணியில் ஒருமுறை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை.. அவர் கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் இந்திய அணியுடன் பயணித்துவருவது குறிப்பிடத்தக்கது..
ருதுராஜ் கெய்க்வாட் - முதல்தர கிரிக்கெட் மற்றும் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ரன்களை குவித்துவரும் ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி சென்றதற்கு பிறகு அவருடைய இடத்தை நிரப்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்டபோது அவருக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.. முதல்தர கிரிக்கெட், லிஸ்ட் ஏ கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் என அனைத்தையும் சேர்த்து 12000 ரன்களுக்கு மேல் ருதுராஜ் குவித்துள்ளார்..