”இதை பிரித்வி ஷாவுக்கு காட்டுங்கள்..” 17 கிலோ எடையை குறைத்த சர்பராஸ் கான்! வியந்த பீட்டர்சன்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் சொந்த மண்ணில் சர்பராஸ் கானுக்கு சிறப்பாக செல்லவில்லை. சொல்லப்போனால் ஒட்டுமொத்த இந்திய பேட்ஸ்மேன்களுக்குமே சிறப்பாக செல்லவில்லை என்றாலும், அதன் எதிரொலியாக சர்பராஸ் கானுக்கு ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்திலும் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆஸ்திரேலியா மண்ணில் பிளேயிங் லெவனில் மட்டும்தான் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், இங்கிலாந்துக்கான சுற்றுப்பயணத்தில் அவருடைய பெயர் இடம்பெறவே இல்லை.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சர்பராஸ் கானின் பெயர் நீக்கப்பட்ட பிறகு, ஹர்பஜன் சிங் முதலிய வீரர்கள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இதற்குமுன்பு தன்னுடைய உடல் எடையை காரணம்காட்டி சர்பராஸ் கானுக்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில், அப்படி ஒரு சூழல் இனி ஏற்படக்கூடாது என்பதற்காக 17 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார் சர்ப்ராஸ் கான். இது இணையத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
17 கிலோ எடை குறைத்த சர்பராஸ்.. வியந்து போன பீட்டர்சன்!
இந்தியாவின் இளம் வீரரான சர்பராஸ்கான் இரண்டு மாதத்தில் தன்னுடைய உடல் எடையை 17கிலோ வரை குறைத்துள்ளார். உடல் மெலிந்து காட்சியளிக்கும் அவருடைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. சிலர் ஏன் இப்படி செய்தீர்கள் என அதிர்ச்சியானாலும், பலர் சர்ப்ராஸ்கானின் உழைப்பை பாராட்டிவருகின்றனர்.
அந்தவகையில் சர்பராஸ் கானின் உடல் மெலிந்த புகைப்படத்தை பார்த்த கெவின் பீட்டர்சன், வியந்து போய் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கெவின், “மிகச்சிறந்த முயற்சி, இளைஞனே! மிகப்பெரிய பாராட்டுகள், இது மைதானத்தில் சிறந்த மற்றும் நிலையான செயல்திறனைப் பெற உங்களுக்கு வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் முன்னுரிமைகளை மறுசீரமைக்க நீங்கள் செலவிட்ட நேரத்தை நான் மதிக்கிறேன்! யாராவது இதை பிருத்வி ஷாவுக்குக் காட்ட முடியுமா? இது சாத்தியம் தான்! வலிமையான உடல், வலிமையான மனம்!” என பதிவிட்டுள்ளார்.