2026 ஐபிஎல் தொடரில் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பவுலர்கள் இல்லாமலேயே ஆர்சிபி அசத்தலாக விளையாடி வருகிறது. வான்கடே மைதானத்தில் மும்பையை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அவர்கள், ஒவ்வொரு ஓவரையும் திட்டமிட்டு பந்துவீசி முன்னிலை பெற்றுள்ளனர். 4 போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்தும், அதே அளவு ரன்களை விட்டுக்கொடுத்தும் யுக்தியால் வெற்றியை குவிக்கின்றனர்.
2026 ஐபிஎல் தொடரானது பரபரப்பாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. நடப்பு சாம்பியனான ஆர்சிபி கோப்பையை தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அதேபோல கடந்தமுறை இறுதிப்போட்டியில் தோற்ற பஞ்சாப் கிங்ஸும் இந்தமுறை கோப்பையை தட்டித்துக்கும் முயற்சியிலும், இன்னொரு பக்கம் சூர்யவன்ஷியின் இளம் புயலோடு ராஜஸ்தானும் அதிரடி காட்டிவருகின்றன.
ஆனால் 5 முறை கோப்பை வென்ற சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு அணிகளும் 4 போட்டிகளில் 3 தோல்விகளை கண்டு புள்ளிப்பட்டியலில் 8வது மற்றும் 9வது இடத்தில் நீடிக்கின்றன.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஃபிலிப் சால்ட் மற்றும் ரஜத் பட்டிதாரின் வெடித்து சிதறிய பேட்டிங்கால் 240 ரன்களை மலைபோல் குவித்தது ஆர்சிபி அணி. மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு எதிராக அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆர்சிபி பவுலர்கள் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தனர்.
எந்த வீரர்களுக்கு எந்த பவுலிங் என திட்டமிட்டு செயல்படுத்திய ஆர்சிபி அணி, டெத் ஓவரில் வீசக்கூடிய ஸ்பெசலிஸ்ட் பவுலர்கள் இல்லாமலயே அசத்திவருகின்றனர்.
இந்தசூழலில் ஆர்சிபி அணியின் பந்துவீச்சை பாராட்டியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான், “ஆர்சிபி ஒவ்வொரு ஓவரையும் சரியாக ஆராய்ந்து, நன்கு திட்டமிட்டு, கிட்டத்தட்ட கச்சிதமாக அவர்களுடைய பவுலிங்கை செயல்படுத்துகின்றனர். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ஒருவர் இல்லாமலேயே, அவர்கள் இந்த சீசனில் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள், அதுவும் மிகவும் உறுதியான வெற்றிகளைப் பெறுகிறார்கள்” என பாராட்டியுள்ளார்.
ஆர்சிபி அணி விளையாடிய 4 போட்டிகளிலும் 200 ரன்களுக்கு மேல் அடித்திருக்கும் அதேவேளையில் 4 போட்டியிலும் 200 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது. அவர்களுடைய பவுலிங்கில் குறைகள் இருந்தாலும், அதை சரிசெய்யும் யுக்தியோடு ஆர்சிபி கச்சிதமாக செயல்பட்டு வருகிறது.