8 அணிகள் கலந்துகொண்ட சாம்பியன்ஸ் டிராபி, 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்தத் தொடரின் பாதி போட்டிகள் பாகிஸ்தானிலும், பாதுகாப்பு காரணமாக பிசிசிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் இந்திய அணியின் போட்டிகள் துபாய்க்கும் மாற்றப்பட்டன. அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.
முன்னதாக, இத்தொடரை நடத்திய பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், அது லீக் சுற்றிலேயே நடையைக் கட்டியது. தவிர, இந்தியாவிடம் தோல்வியைத் தழுவியதும் அதன்மீது விமர்சனம் வைக்கப்பட்டது. அப்போது பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "இந்திய பி அணியே நிச்சயமாக பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும். இந்தியா சி அணி பாகிஸ்தானை வீழ்த்துவது வேண்டுமானால் கடினமாக இருக்கலாம்" எனக் கூறி இருந்தார்.
பாகிஸ்தான் அணி தற்போது மிக மோசமாக இருப்பதை சுனில் கவாஸ்கர் இவ்வாறு சுட்டிக்காட்டி இருந்தார். ஆனால் அதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். அவர், "இந்தியா போட்டியில் வென்றது. அவர்கள் நன்றாக விளையாடினார்கள். ஆனால், கவாஸ்கர் புள்ளிவிவரங்களையும் பார்க்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதிலிருந்து தப்பிக்க அவர் ஒருமுறை ஷார்ஜாவை விட்டு ஓடிவிட்டார். அவர் எங்களைவிட மூத்தவர். நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம். ஆனால் நீங்கள் அப்படி ஒரு நாட்டைப் பற்றி பேசக்கூடாது. நிச்சயமாக, உங்கள் அணியை நீங்கள் விரும்பும் அளவுக்குப் புகழ்ந்து பேச உங்களுக்கு உரிமை உண்டு.
ஆனால் மற்ற அணிகளைப் பற்றி இப்படி கருத்து தெரிவிப்பது மோசமானது. புள்ளிவிவரங்களைப் பார்க்கச் சொல்லுங்கள், பாகிஸ்தான் எங்கே இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அவர் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டதில் நான் மிகவும் வேதனையடைந்தேன். அவர் ஒரு சிறந்த, மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரர், ஆனால் இதுபோன்ற கருத்துக்களைச் சொல்வதன் மூலம், அவர் தனது மரபை இழிவுபடுத்துகிறார். அவர் தனது நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்றவர், இரு அணிகளுக்கும் இடையிலான நேருக்கு நேர் போட்டி புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.