சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி| சுழலில் மிரட்டிய வருண், குல்தீப் யாதவ்... டார்கெட் 252..!
2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லப்போகும் சாம்பியன் அணி நியூசிலாந்தா அல்லது இந்தியாவா என்பது இன்னும் சற்றுநேரத்தில் தெரிந்துவிடும்.
துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 240 ரன்கள் அடித்துள்ளது.
சுழலில் மிரட்டிய இந்திய அணி நியூசிலாந்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தபோதும் இழுத்துப்பிடித்துள்ளது.
சுழலில் மிரட்டிய வருண், குல்தீப்!
2002 மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற இந்திய அணி 3வது கோப்பைக்காகவும், 2000 ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற நியூசிலாந்து அணி இரண்டாவது கோப்பைக்காகவும் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ச்சியாக 15வது முறையாக டாஸை இழந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் எப்படி செயல்பட போகிறது என்ற கவலை எல்லோருக்கும் எழுந்தது.
அதற்கேற்றார் போல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட்டையே இழக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர். சிறந்த ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அச்சுறுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி நியூசிலாந்து செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தபோது சரியான நேரத்தில் பந்துவீச வந்த வருண் சக்கரவர்த்தி வில் யங்கை 15 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார். உடனடியாக குல்தீப் யாதவை எடுத்துவந்த கேப்டன் ரோகித் சர்மா, ஒரு மாஸ்டர் நகர்த்தலை கொண்டுவந்தார்.
வீசிய முதல் பந்திலேயே ரச்சினை போல்டாக்கி 37 ரன்னில் வெளியேற்றிய குல்தீப் யாதவ், அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சனை 11 ரன்னில் வெளியேற்றி நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். உடன் டாம் லாதமும் 14 ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தபிறகு அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேரில் மிட்செல் 63 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 34 ரன்கள் மற்றும் பிரேஸ்வெல் 53 ரன்களும் என அடிக்க 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து அணி.
சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.