சாம்பியன்ஸ் டிராபி| 3வது முறையாக சாம்பியன்.. நியூசிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியது இந்தியா!
2025 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியானது பரபரப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.
2002 மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்ற இந்திய அணி 3வது கோப்பைக்காக களம்கண்டது. அதேபோல 2000 ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை வென்ற நியூசிலாந்து அணி இரண்டாவது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் இறுதிப்போட்டியில் காலடி வைத்தது.
இந்நிலையில் துபாயில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று மகுடம் சூடியுள்ளது இந்திய அணி.
சுழலில் மிரட்டிய வருண், குல்தீப்..
துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடர்ச்சியாக 15வது முறையாக டாஸை இழந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் எப்படி செயல்பட போகிறது என்ற கவலை எல்லோருக்கும் எழுந்தது.
அதற்கேற்றார் போல் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் இருவரும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி விக்கெட்டையே இழக்காமல் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர். சிறந்த ஃபார்மில் இருக்கும் ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி அச்சுறுத்தும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி நியூசிலாந்து செல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தபோது சரியான நேரத்தில் பந்துவீச வந்த வருண் சக்கரவர்த்தி வில் யங்கை 15 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார். உடனடியாக குல்தீப் யாதவை எடுத்துவந்த கேப்டன் ரோகித் சர்மா, ஒரு மாஸ்டர் நகர்த்தலை கொண்டுவந்தார்.
வீசிய முதல் பந்திலேயே ரச்சினை போல்டாக்கி 37 ரன்னில் வெளியேற்றிய குல்தீப் யாதவ், அடுத்த ஓவரில் கேன் வில்லியம்சனை 11 ரன்னில் வெளியேற்றி நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார். உடன் டாம் லாதமும் 14 ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி தடுமாறியது.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்தபிறகு அணியை சரிவிலிருந்து மீட்க போராடிய டேரில் மிட்செல் மற்றும் க்ளென் பிலிப்ஸ் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டேரில் மிட்செல் 63 ரன்களும், க்ளென் பிலிப்ஸ் 34 ரன்கள் மற்றும் பிரேஸ்வெல் 53 ரன்களும் என அடிக்க 50 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பை வென்றது இந்தியா!
252 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது. 5 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த கேப்டன் ரோகித் சர்மா அரைசதமடித்து அசத்தினார்.
105 ரன்கள் அடித்து விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் இந்திய அணி ரன் சேஸிங்கை எளிதாக காமிக்க, சுப்மன் கில் காற்றில் அடித்த பந்தை பறவையை போல் பறந்து பிடித்த க்ளென் பிலிப்ஸ் ஒரு அற்புதமான கேட்ச்சை பிடிக்க முதல் விக்கெட் விழுந்தது. உடன் களத்திற்கு வந்த விராட் கோலியும் 1 ரன்னில் அவுட்டாகி வெளியேற இந்தியாவின் பக்கம் அழுத்தம் அதிகமானது.
அதற்குபிறகு நியூசிலாந்தின் ஸ்பின்னர்கள் கட்டுக்கோப்பாக்காக பந்துவீச இந்திய அணி வீரர்கள் ரன்களை எடுத்துவர சிரமப்பட்டனர். அழுத்தம் கூட கூட களத்தில் அதுவரை நிலைத்து நின்ற கேப்டன் ரோகித் சர்மா, இறங்கி வந்து சிக்சர் அடிக்க முயற்சி செய்து ஸ்டம்ப்அவுட்டாகி 76 ரன்னில் வெளியேறினார்.
குறைவான இடைவெளியில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், அணியை மீட்டு எடுத்துசெல்ல வேண்டிய பொறுப்பு ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் பட்டேலின் தோள்களில் சேர்ந்தது. பொறுப்பை உணர்ந்த இந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அழுத்தத்தை குறைத்தது.
சரி எல்லாமே நல்லா போயிட்டு இருக்கு என ரசிகர்கள் நிம்மதியடைய, ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்னிலும், அக்சர் பட்டேல் 29 ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேற மீண்டும் ஆட்டம் சூடுபிடித்தது.
ஏற்றம், இறக்கம் என மாறிய இந்தப்போட்டியை பார்த்த ரசிகர்கள் அழுத்தத்தின் உச்சத்திற்கே சென்றனர். ஆனால் களத்திற்கு வந்தn கேஎல் ராகுல் சிக்சரை பறக்கவிட, ஹர்திக் பாண்டியா சிக்சர் பவுண்டரி என விளாசி அழுத்தத்தை மீண்டும் நியூசிலாந்தின் பக்கம் திருப்பிவிட்டார். ஆனால் சிறிதுநேரத்தில் ஹர்திக் பாண்டியா அவுட்டாகி வெளியேற, ”ஏன் பா நல்லா இருக்க நாங்க ஹார்ட் பேசண்ட்டா (Heart Patient) மாறிடுவோம் போல” சீக்கிரம் முடிங்க பா என்ற நிலைமைக்கே ரசிகர்கள் சென்றனர்.
இறுதியில் வின்னிங் ஷாட்டாக ரவிந்திர ஜடேஜா பவுண்டரியை விளாச, இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை முத்தமிட்டது. வின்னிங் ஷாட் அடித்த பிறகு ரவிந்திர ஜடேஜா ரசிகர்களுக்கு பறக்கும் முத்தமிட்டார். முதல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடிய அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, வருண் சக்கரவர்த்தி மூன்றுபேரும் மைதானத்தை நோக்கி குதூகலத்துடன் ஓடிவந்தனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஸ்டம்ப்களை கையிலேந்தி கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர். இந்தியா முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்தை வெளிப்படுத்திவருகின்றனர்!
1983 ஒருநாள் உலகக்கோப்பை, 2002 சாம்பியன்ஸ் டிராபி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக்கோப்பை என 6 கோப்பைகளை வென்றிருந்த இந்திய அணி 7வது ஐசிசி கோப்பையாக 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்று மகுடம் சூடியுள்ளது. இந்திய கேப்டனாக ரோகித் சர்மா 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று தோனிக்கு பிறகு அதிக ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய கேப்டனாக முத்திரை பதித்துள்ளார்.