ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படவிருக்கும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படவிருக்கும் நிலையில், குரூப் ஏ-ல் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் முதலிய அணிகளும், குரூப் பி-ல் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஜனவரி 12 ஆம் தேதியே அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை சமர்பிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்திருந்த நிலையில், இந்திய அணி மட்டும் கால அவகாசம் கேட்டிருந்தது. ஜனவரி 18 ஆம் தேதி வீரர்களின் பட்டியல் சமர்பிக்கப்படும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், பலரும் எதிர்பார்த்தபடியே இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, அர்ஷ்தீப், ஜெய்ஸ்வால், பந்த், ஜடேஜா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பும்ராவின் உடல்நிலை சரியாகும் வரை இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான அணியில் ஹர்ஷித் ராணா இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறுகையில், “பும்ராவின் உடற்தகுதிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். பிப்ரவரி தொடக்கத்தில் பிசிசிஐயின் மருத்துக் குழுவிடம் இருந்து பும்ராவின் உடல்நிலை குறித்தான தகவலைப் பெற்றுக்கொள்வோம். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்படுவார். ராகுல் பேட்ஸ்மேனாக செயல்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.