தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்றதுடன், தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியை தென்னாப்ரிக்கா 2-0 என முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் வெற்றிபெற்றன. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது போட்டி, இன்று இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் தென்னாப்பிரிக்க அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி முதலில் பேட் செய்யத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, ஆரம்பம் முதலே சரிவைச் சந்தித்தது.
கடந்த போட்டியில் ருத்ர தாண்டவம் ஆடிய டிகாக், இன்றைய போட்டியில் 1 ரன் எடுத்த நிலையிலும், ரீஷா ஹெண்டிரிக்ஸ் டக் அவுட் முறையிலும் பெவிலியன் திரும்பினர். எனினும், கேப்டன் மார்க்ரம் நிலைத்து நின்றார். ஆனால், மற்ற வீரர்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்தனர். இடையில் மார்க்ரம்முக்கு துனையாக டெனோவன் பெரோரா அதிரடியாக ஆடி 20 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த வீரர்களும் சோபிக்காத நிலையில், அவ்வணி 20 ஓவர்களில் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மார்க்ரம் மட்டும் அதிகபட்சமாக 61 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப், ஹர்சித், வருண், குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். ஹர்திக் மற்றும் ஷிவம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர், 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமாக இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் முதல் பந்தையே சிக்ஸருக்குத் தூக்கி அபிஷேக் சர்மா அமர்க்களப்படுத்தினார். தவிர தொடர்ந்து அதிரடி காட்டினார்.
மறுமுனையில் ஷுப்மன் கில்லும் தன்மீதான விமர்சனத்தைப் போக்கும் வகையில் நிதானத்தைக் கடைப்பிடித்தார். எனினும் இந்த ஜோடி நிலைக்கவில்லை. அபிஷேக் சர்மா 18 பந்துகளில் 35 ரன்னுடனும், கில் 28 ரன்னுடனும் நடையைக் கட்டினர். பின்னர் கடந்த போட்டியில் அரைசதம் அடித்த திலக் வர்மாவும், கேப்டன் சூர்யகுமாரும் இணைந்தனர். இந்த ஜோடி, அணியை வெற்றியை நோக்கி இழுத்தும் செல்லும் நோக்கில் கடைசிக்கட்டத்தில் அதிரடி காட்டினர். ஆனாலும், வழக்கம்போலவே கேப்டன் சூர்யகுமார் 12 ரன்களில் வெளியேறினார். திலக்குடன் ஷிவம் துபே கைகோர்த்தார். இனி விக்கெட்டை விடக்கூடாது என்று முடிவு செய்த திலக் வர்மா, மேலும் அதிரடி காட்டினார். இறுதியில் ஷிவம் துபே ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 15.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4வது போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.