IND Vs SA T20 | திலக் வர்மாவின் போராட்டம் வீண்.. 2ஆவது போட்டியில் SA அசத்தல் வெற்றி!
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியைச் சந்தித்தது. தென்னாப்பிரிக்கா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியை தென்னாப்ரிக்கா 2-0 என முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே இவ்விரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி, இன்று சண்டிகரில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்யத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டிகாக், ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சைச் சிதறடித்தார். இறுதியில், 45 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சுழலில் ஸ்டெம்பிட் முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கம். ஆனால் பின்னர் களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் (29), பெரோரா (30*), மில்லர் (20*) ஆகியோர் கடைசிகட்டத்தில் அதிரடி காட்ட, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின்னர், 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடி காட்டினாலும், வழக்கம்போலவே ஷுப்மன் கில்லும் கேப்டனும் சூர்யகுமார் யாதவும் விரைவாகவே நடையைக் கட்டினர். இதில் ஷுப்மன் கில் டக் அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார். சூர்ய குமார் யாதவ் 5 ரன்கள் எடுத்தார். பின்னர், அபிஷேக் சர்மா 17 ரன்களிலும், அக்ஷர் படேலை 21 ரன்களிலும் இந்திய அணி இழந்து தடுமாற்றத்தைச் சந்தித்தது. ஆனாலும் திலக் வர்மா அணியைக் காப்பாற்றும் வகையில் அதிரடி காட்டினார். அவருக்குத் துணையாக ஹர்திக் பாண்ட்யா இருந்தாலும், அவர் 20 ரன்களில் நடையைக் கட்டினார். எனினும் தனி ஒருவனாக திலக் வர்மா இறுதிவரை போராடினாலும், இதர வீரர்கள் ஏமாற்றினர். இதனால், இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் இந்திய அணி, 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கடைசி விக்கெட்டாக விழுந்த திலக் வர்மா 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரியும் 5 சிக்ஸரும் அடக்கம். தென்னாப்பிரிக்க தரப்பில் பார்ட்மேன் 4 விக்கெட்களை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இருஅணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கான 3வது போட்டி தர்மசாலாவில் வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

