IND Vs SA T20 | பயம் காட்டிய டி காக்.. ஒரே ஓவரில் 13 பந்துகளை வீசிய அர்ஷ்தீப் சிங்.. அதில் 7 வைடு!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அர்ஷ்தீப் சிங், ஒரே ஓவரில் 13 பந்துகள் வீசி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதில் 7 வைடு பந்துகளும் அடக்கம்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டியை தென்னாப்ரிக்கா 2-0 என முழுமையாக வென்ற நிலையில், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது. இதற்கிடையே இவ்விரு அணிகளுக்கான 2வது டி20 போட்டி, இன்று சண்டிகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்யத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியில் குயிண்டன் டிகாக், இந்திய பந்துவீச்சைச் சிதறடித்தார்.
கடந்த போட்டியில் இவர் டக் அவுட் முறையில் வீழ்ந்த நிலையில், தற்போது அதைச் சரிசெய்யும் விதத்தில் ஆடினார். தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கிய அவர், 45 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சுழலில் ஸ்டெம்பிட் முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 7 சிக்ஸர்களும் அடக்கம். அவர் வெளியேறினாலும், அவருக்குப் பின் வந்த வீரர்களும் அதிரடியில் கலக்க, தென்னாப்பிரிக்கா 200 ரன்களை நோக்கிப் பயணித்தது. கேப்டன் மார்க்ரம் (29), பெரோரா (30*), மில்லர் (20*) ஆகியோரின் கடைசிகட்ட அற்புதமான சிக்ஸர்களால் அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
இந்த நிலையில், ஒரே ஓவரில் அதிக பந்துகள் வீசிய பவுலர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங்கும் இடம்பிடித்துள்ளார். இன்றைய போட்டியில் 11வது ஓவரை வீசிய அவர், 13 பந்துகளை (6 Wd Wd 0 Wd Wd Wd Wd 1 2 1 Wd 1 (18 runs) வீசியுள்ளார். இதில் 7 வைடு பந்துகளும் அடக்கம்.
இதன்மூலம் நவீன் உல் ஹக்குடன் அவர் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். 2வது இடத்தில் சிசந்தா மகலா உள்ளார். அவர், 12 பந்துகள் வீசியுள்ளார். அர்ஷ்தீப் சிங்கின் இந்தப் பந்துவீச்சு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் நிலையில், மைதானத்தின் பிட்ச் குறித்தும் பேசப்படுகிறது.

