2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.
11 லீக் போட்டிகள் முடிவை பெற்றுள்ள நிலையில் 8 அணிகளிலிருந்து ‘இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா’ என 4 அணிகள் அரையிறுதியை சீல் செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றிபெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் என்பதால் அதிக எதிர்ப்பார்ப்புடன் போட்டி நடந்துவருகிறது.
சமபலம் கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் சாண்ட்னர் பந்துவீச்சை தேர்வுசெய்தார். முதலில் பேட்டிங் செய்யவந்த இந்தியாவிற்கு ஃபார்மில் இருந்துவரும் சுப்மன் கில்லை 2 ரன்னில் வெளியேற்றினார் மேட் ஹென்றி.
அவரைத்தொடர்ந்து அடித்து ஆட முயற்சித்த கேப்டன் ரோகித் சர்மை மிஸ் ஷாட் மூலம் கேட்ச் கொடுத்து 15 ரன்னில் வெளியேறினார். அதற்குபிறகு களமிறங்கிய விராட் கோலியை ஒரு பிரமாதமான கேட்ச் மூலம் வெளியேற்றினார் க்ளென் பிலிப்ஸ்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளாக விழ நிலைத்து நின்று ஆடிய ஸ்ரேயாஸ் மற்றும் அக்சர் பட்டேல் ஜோடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அணியை மீட்டு எடுத்துவந்தனர். அக்சர் பட்டேல் 42 ரன்கள் அடித்து வெளியேற, ஸ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடும் முயர்சியில் 79 ரன்கள் இருந்தபோது கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்துவந்த கேஎல் ராகுலும் 23 ரன்னில் நடையை கட்ட 182 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி தடுமாறியது. இறுதிவரை களத்தில் நிலைத்துநின்று போராடிய ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 249 ரன்களை சேர்த்தது இந்திய அணி.
சிறப்பாக பந்துவீசியா மேட் ஹென்றி முக்கியமான போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.