வதோதராவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து 300 ரன்கள் குவித்தது. இந்தியா 301 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட, கோலி 93 ரன்னில் வெளியேறினார். கடைசி நேரத்தில் ஹர்சித் ராணா, கேஎல் ராகுல் இருவரின் அதிரடி ஆட்டம் இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றது. இந்தியா தொடரில் 1-0 முன்னிலை பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி வதோதரா மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 300 ரன்கள் குவித்து அசத்தியது.
பரபரப்பாக தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டெவான் கான்வே மற்றும் ஹென்றி நிக்கோலஸ் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டினர்.
மிகப்பெரிய டோட்டலை நோக்கி நியூசிலாந்து அடித்தளமிட சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷித் ராணா அடுத்தடுத்து இரண்டு தொடக்க வீரர்களையும் 56, 62 ரன்களில் வெளியேற்றி அசத்தினார். தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வரிசையாக வெளியேற, மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 84 ரன்கள் குவித்து அசத்தினார். 3 நியூசிலாந்து வீரர்களின் அரைசதத்தின் உதவியால் 50 ஓவரில் 300 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
301 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ரோகித் 26 ரன்னிலும், சுப்மன் கில் 56 ரன்னிலும் வெளியேற, அடுத்த வந்த கிங் கோலி 8 பவுண்டரிகள் 1 சிக்சர் என பறக்கவிட்டு 93 ரன்கள் அடித்து வெளியேறினார். 7 ரன்னில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு ரசிகர்களை ஏமாற்றினார்.
மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயரும் 49 ரன்னில் வெளியேற, ஜடேஜா 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய நியூசிலாந்து அணி தரமான கம்பேக் கொடுத்தது. இறுதிவரை நியூசிலாந்து போராட ஹர்சித் ராணா, கேஎல் ராகுல் இருவரின் கடைசிநேர அதிரடி ஆட்டம் இந்தியாவை ஒரு த்ரில்லர் வெற்றிக்கு அழைத்துச்சென்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.