விராட் கோலி
விராட் கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

உலகக்கோப்பை 2023: நெருங்க முடியாத ரன் வேட்டை.. தங்க பேட்டை 99% உறுதிசெய்த விராட் கோலி!

Prakash J

ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவந்த ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா, இன்னும் இரண்டு தினங்களில் நிறைவுபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளும், 20 ஆண்டுகளுக்குப் பின் மோத இருப்பதால், பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரு அணிகளும் நவம்பர் 19ஆம் தேதி, மதியம் 2 மணிக்கு, குஜராத் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது அரையிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி, ரன் வேட்டை நடத்தியதுடன் பல்வேறு இமாலய சாதனைகளையும் முறியடித்து வரலாற்றில் இடம்பிடித்தார். இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பைத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலிலும் அவரே முதலிடத்தில் உள்ளார். 10 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 711 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதையடுத்து, அவர் நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்க பேட்டைத் தட்டிச் செல்ல இருக்கிறார்.

இதையும் படிக்க: ”கோலியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது”- பகைக்கு இடையே மனம்திறந்து பாராட்டிய சவுரவ் கங்குலி!

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு தங்க பேட் பரிசாக வழங்கப்படும். அது, இந்த முறை விராட் கோலிக்குக் கிடைக்க இருப்பது கிட்டதட்ட ப்உறுதியாகி உள்ளது. விராட் கோலிக்கு அடுத்து தென்னாப்பிரிக்க தொடக்க பேட்டர் குயிண்டன் டிகாக் 594 ரன்களுடனும், அவரைத் தொடர்ந்து நியூசிலாந்து வீரர் ரக்சின் ரவீந்திரா 578 ரன்களுடனும் உள்ளனர். 4வது இடத்தில் நியூசிலாந்து வீரர் மிட்சல் (552), 5வது இடத்தில் இந்திய கேப்டன் ரோகித் (550) ஆகியோர் உள்ளனர். அதன்படி, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் தோற்றதுடன் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.

இதனால், அந்த வீரர்கள் மேலும் ரன்கள் குவிக்க வாய்ப்பில்லை. இந்திய கேப்டன் ரோகித்தோ, கோலியைவிட 161 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளார். அதுபோல் ஆஸ்திரேலிய பேட்டர் டேவிட் வார்னர் 183 ரன்கள் வித்தியாசத்துடன் 6வது இடத்தில் உள்ளார். அவர் இதுவரை 528 ரன்கள் எடுத்துள்ளார். அடுத்த போட்டியில் ரோகித் மற்றும் வார்னர் விளையாண்டாலும் இவ்வளவு ரன்களைக் குவிப்பார்களா எனத் தெரியவில்லை. எனினும், அதே போட்டியில் விராட் கோலியும் ஆட வாய்ப்புள்ளது. ஆக, மேலும் விராட் கோலியே அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளதால், நடப்பு உலகக்கோப்பை தொடரின் தங்க பேட் பரிசு உறுதியாகி உள்ளது.

இதையும் படிக்க: WC Final: சுழலில் திணறும் ஆஸ்திரேலியா.. அஸ்வினுக்கு வாய்ப்பு? மாற்றம் செய்யும் ரோகித்?