முஷீர் கான், இந்தியா யு19 அணி
முஷீர் கான், இந்தியா யு19 அணி ட்விட்டர்
கிரிக்கெட்

யு19 உலகக்கோப்பை: இந்தியா மீண்டும் வெற்றி.. சதம் அடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான் தம்பி முஷீர் கான்!

Prakash J

ஐசிசி19 வயதுக்குட்பட்ட ஆடவர் உலகக்கோப்பை 2024 தொடர், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நான்கு பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குரூப் A பிரிவில் பங்களாதேஷ், இந்தியா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளும்,

குரூப் Bயில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளும்,

குரூப் Cயில் ஆஸ்திரேலியா, நமீபியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகளும்

குரூப் D-யில் ஆப்கானிஸ்தான், நேபாளம், நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்பின் 4 குரூப்களில் இருந்து தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றுக்கு பின் அரையிறுதி மற்றும் இறுதிப்போடி நடக்கவுள்ளது.

இதையும் படிக்க: மாலத்தீவுக்கு நோக்கி விரையும் சீனக் கப்பல்.. இந்தியாவுக்கு முற்றும் நெருக்கடி - பின்னணி என்ன?

அந்த வகையில் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியும் அயர்லாந்தும் இன்று (ஜன.25) மோதின. இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த அயர்லாந்து அணி, முதலில் இந்திய அணியை பேட் செய்ய பணித்தது. அதன்படி, தொடக்க பேட்டர்களாக ஆதர்ஷ் சிங்கும் அர்சின் குல்கர்னியும் களமிறங்கினர். ஆதர்ஷ் 17 ரன்களிலும், குல்கர்னி 32 ரன்களிலும் ஆட்டமிழந்தபோதும், முஷீர் கான் மற்றும் கேப்டன் உதய் சாகரண் இணைந்து ரன் மழை பொழிந்தது. குறிப்பாக, முஷீர் கான் பட்டையைக் கிளப்பினார். அவர், 106 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸருடன் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர் வேறு யாருமல்ல. எவ்வளவுதான் ரஞ்சி மற்றும் இதர போட்டிகளில் சதம் அடித்து சிறப்பாக விளையாண்டாலும் தேர்வுக் குழுவினரால் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவித்துவரும் சர்ஃப்ராஸ் கானின் சகோதரர் ஆவார். நேற்றைய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்கூட சர்ஃப்ராஸ் கான் 161 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முஷீர் கானுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் உதய் சாகரன் இன்றைய போட்டியிலும் அரைசதம் விளாசினார். அவர் 75 ரன்களில் ஆட்டமிழந்தார். எனினும் அவருக்குப் பிறகு களமிறங்கிய ஆரவல்லி அவினாஷும் (22 ரன்கள்), சச்சின் தாஸும் அதிரடியில் கலக்க, இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் ஒலிவர் ரிலே 3 விக்கெட்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: 18 x 4, 5 x 6 ! மீண்டும் மீண்டும் சதமடித்து நிரூபிக்கும் சர்ஃப்ராஸ் கான்! இனியாவது கதவு திறக்குமா?

பின்னர் மிகவும் கடினமான இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி, தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்களை தாரைவார்த்த வண்ணம் இருந்தது. தொடக்க பேட்டர் ஜோர்டான் நெய்ல் 11 ரன்களும், ரியான் ஹண்டர் 13 ரன்களும் எடுத்த நிலையில், பின்னர் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கில் நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 60 ரன்களுக்குச் சுருண்டுவிடும் இந்திய அணி கணித்தது. ஆனால், அவர்களின் கணிப்பைப் பொய்யாக்கிய கடைசி வரிசை வீரர்களான ஒலிவர் ரிலேவும் (15), டேனியல் ஃபோர்கினும் (27*) அணி, 100 ரன்கள் எட்டுவதற்கு இழுத்துச் சென்றனர்.

எனினும், அந்த அணி 100 ரன்களை எட்டிய பிறகு ஆட்டமிழந்தது. இறுதியில் அந்த அணி 29.4 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து இந்திய அணி, ஜனவரி 28ஆம் தேதி அமெரிக்காவை கடைசி லீக்கில் எதிர்கொள்ள இருக்கிறது. சதம் விளாசிய முஷீர் கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.