18 x 4, 5 x 6 ! மீண்டும் மீண்டும் சதமடித்து நிரூபிக்கும் சர்ஃப்ராஸ் கான்! இனியாவது கதவு திறக்குமா?

இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிராக, மீண்டும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார் மும்பையைச் சேர்ந்த சர்ஃப்ராஸ் கான்.
சர்ஃப்ராஸ் கான்
சர்ஃப்ராஸ் கான்ட்விட்டர்

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: சாதிக்கும் சர்ஃப்ராஸ் கான்!

டெஸ்ட் போட்டிகளுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் ஒவ்வொரு தொடரின்போதும், மும்பை அணி வீரரான சர்ஃப்ராஸ் கான் பெயர் அடிபடும். ஆனால் கடைசிவரை அவரது பெயர் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படாது என்பதுதான் எழுதப்படாத விதியாக இருக்கிறது. அதேநேரத்தில், இந்தியா எதிர்கொள்ள இருக்கும் டெஸ்ட் போட்டி தொடர்களுக்கு முன்பாக நடக்கும் கிரிக்கெட் போட்டிகளில் சர்ஃப்ராஸ் கான், சதமடித்து தன் பெயரையும், திறமையையும் நிரூபித்துக் கொண்டே இருப்பார். இந்த முறையும் அதேநிகழ்வு நடந்துள்ளது.

ஆம், தற்போது இந்தியா - இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி இன்று (ஜன.25) ஐதராபாத்தில் தொடங்கியது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அஸ்வின் - ஜடேஜா ஜோடி, தலா 3 விக்கெட்களை வீழ்த்திய புதிய சாதனைக்கு வித்திட்டனர். பின்னர், முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் தொடக்க பேட்டர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இங்கிலாந்து அணிக்கே பேஸ்பால் முறையில் விளையாண்டு வியப்பை ஏற்படுத்தினார். அவரின் அதிரடியால் இந்திய அணி முதல் நாளில் 1 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. யாஷஸ்வி 76 ரன்களுடனும், சுப்மன் கில் 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கு எதிராக சதம் கண்ட சர்ஃப்ராஸ் கான்

இந்த நிலையில், இங்கிலாந்து லைன்ஸ் அணிக்கும், இந்தியா ஏ அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜன.24) அகமதாபாத் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் இங்கிலாந்து லைன்ஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் ஆடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 493 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய ஏ அணி 341 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது.

இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் இவ்வளவு பெரிய ரன்களைக் குவிப்பதற்கு தேவ்தத் படிக்கலும், சர்ஃப்ராஸ் கானும்தான் முக்கியக் காரணம். அவர்கள் இருவரும் சதமடித்து அசத்தினர். அதிலும் சர்ஃப்ராஸ் கான் ஆடிய விதம்தான் மீண்டும் பேசுபொருளாகி வருகிறது. அவர், முதல் இன்னிங்ஸில் 160 பந்துகளில் 18 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸருடன் 161 ரன்கள் எடுத்தார்.

இந்தப் போட்டியில் குறிப்பாக, அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த நிலையில், அணியை மீட்டும் கொண்டு வந்தார் சர்ஃப்ராஸ் கான். தொடக்க வீரர்களாக அபிமன்யூ ஈஸ்வரன் (58) - தேவ்தத் படிக்கல் (105) சிறப்பாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டை இந்திய அணி 162 ரன்னில் இழந்தபோதும் அடுத்த 22 ரன் எடுப்பதற்குள் அதாவது 184 ரன்னிற்கு 4 விக்கெட்டுக்களை இழந்தது. பின்னர் வாஷிங்டரன் சுந்தர் (57) மற்றும் சவுரப் குமார் (77) உடன் கூட்டணி அமைத்து ரன்களை குவித்தார், சர்ஃப்ராஸ் கான். அதுவும் ரன் ரேட் குறையாமல் சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி தள்ளினார்.

இப்படி, இந்திய அணி ஒவ்வொரு முறையும் பிற அணிகளுடன் டெஸ்ட் தொடர்களில் விளையாடும்போதெல்லாம், சர்ஃப்ராஸ் கான் சதமடித்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சமீபத்தில்கூட தென்னாப்பிரிக்கா டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய ஏ அணியில் இடம்பிடித்திருந்த சர்ஃப்ராஸ் கான் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் சாதிக்கும் நிஜமான கதாநாயகன்!

இப்படி, ஒவ்வொரு டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும்போதெல்லாம், சர்ஃப்ராஸ் கான் சதம் அடிக்கும்வேளையில், அவரது பெயர் தேர்வுக்குழுவினரால் பரிசீலிக்கப்படுகிறது. ஆனால், கடைசிக்கட்டத்தில் ஏதோ ஒரு காரணத்தால் அவர் கழட்டிவிடப்படுகிறார். தற்போதுகூட, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளார். இதையடுத்து, இந்த 2 போட்டிகளுக்கு சர்ஃப்ராஸ் கான் பெயரும் தேர்வுக்குழுவினரால் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் வீரர் ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டார். இதன்மூலம், சர்ஃப்ராஸ் கான் மீண்டும் இந்திய தேர்வுக் குழுவினரால் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். இதனிடையே சர்ஃப்ராஸ் கானுக்கு ஆதரவாக பலரும் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் தன்னுடைய எக்ஸ் தளத்தில், “இவர் நீங்களாக இருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து நீங்கள் தேர்வாகவில்லை என்றால் என்ன நினைப்பீர்கள்?” என்று குறிப்பிட்டுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களையும் ஷேர் செய்துள்ளார்.

ஒவ்வொரு முறையும் இந்திய அணி தேர்வுக் குழுவினரால் ஒதுக்கப்பட்டாலும், தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார், இந்த நிஜமான கதாநாயகன் சர்ப்ராஸ்! இது ஒருபுறம் இருக்க, மறுபுறம் தற்போது நடைபெற்று வரும் யு19 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கும் சர்ஃப்ராஸ் கானின் தம்பியும் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 106 பந்துகளில் 118 ரன்கள் எடுத்துள்ளார்.

சர்ஃப்ராஸ் கான்
பயிற்சி ஆட்டம்: ரோகித் அணியைக் கதறவிட்ட சர்ஃப்ராஸ் கான்.. ருதுராஜுக்குப் பதிலாக இடம்கிடைக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com