மாலத்தீவு நோக்கி விரையும் சீனக் கப்பல்.. இந்தியாவுக்கு முற்றும் நெருக்கடி - பின்னணி என்ன?

சீன கடற்படைக்குச் சொந்தமான ஜியாங் யாங் ஹாங் 03 என்ற உளவுக் கப்பல், மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி வந்துகொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மாதிரிப் படம்
மாதிரிப் படம்ட்விட்டர்

 இந்தியா - மாலத்தீவு உறவில் விரிசல்: சீனா காரணமா?

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை குறிப்பிட்டு மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் விரிசல் அதிகரித்தது. மேலும், மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படி, இந்தியா - மாலத்தீவு இடையே உரசல் போக்கு தொடரும் நிலையில், சீனாவுடன் இணைப்பைப் பலப்படுத்த மாலத்தீவு அதிபர் பல்வேறு யுக்திகளை முன்னெடுத்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

முய்சு, மோடி, ஜின்பிங்
முய்சு, மோடி, ஜின்பிங்ட்விட்டர்

அதன் அங்கமாக மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு விதித்துள்ளார். அதன்படி இந்திய ராணுவ வீரர்கள் மார்ச் 15க்குள் அந்நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என அவர் அறிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் இந்தியாவுடன் விரோத போக்கை கடைப்பிடிப்பதற்கு சீனாதான் காரணம் என அந்நாட்டு எதிர்க்கட்சிகளே விமர்சனம் செய்து வருகின்றன. மேலும் அதிபர் முகமது முய்சுவின் நடவடிக்கையால் மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர் என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் அதிபர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்தியாவுக்கு ஆதரவாக மாலத்தீவில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள்!

மேலும், இதுதொடர்பாக பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்.டி.பி.) மற்றும் ஜனநாயகக் கட்சி சேர்ந்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றன. அதில், ’புதிய அதிபர் மாலத்தீவின் முதன்மை துறைமுகமாக சீனாவை கருதுகிறார். ஆனால் வரலாற்றுரீதியாக புதுடெல்லிதான் நம்முடைய முதன்மை துறைமுகமாக இருந்திருக்கிறது. எனவே, புதிய அதிபரின் நடவடிக்கை, நமது நாட்டைப் பாரம்பரியத்திலிருந்து விலகிச் செல்ல வைத்திருக்கிறது. தற்போதைய அரசின் நிலைப்பாடு, இந்தியாவுக்கு எதிரானதாக இருக்கிறது. இது நாட்டின் நீண்டகால வளர்ச்சிக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நமது நாட்டின் வளர்ச்சிக்காக நாம் அனைத்து நாடுகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும்’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மாலத்தீவு நாடாளுமன்றத்தின் மொத்தம் உள்ள 87 எம்பிக்களில் 55 பேர் இணைந்து கூட்டாக மேற்குறிப்பிட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவை நோக்கி விரையும் சீன உளவுக் கப்பல்

இந்த நிலையில், சீன கடற்படைக்கு சொந்தமான ஜியாங் யாங் ஹாங் 03 என்ற உளவுக் கப்பல், மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கப்பல், இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை கடந்து, சுந்தா ஜலசந்தி அருகே இந்திய பெருங்கடல் பகுதியை அடைந்துள்ளதாகவும், அடுத்த மாதம் 8ஆம் தேதி மாலே வந்தடையும் என்றும் செயற்கைக்கோள் புகைப்படம் வாயிலாக தெரியவந்துள்ளது.

சீன உளவுக் கப்பல்: மாலத்தீவு சொல்லும் காரணம் என்ன?

ஆராய்ச்சி கப்பல் என்ற பெயருடன் மாலத்தீவு வரும் இந்த கப்பல், இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்வாயிலாக, இப்பகுதியில் ஏற்படக்கூடிய எதிர்கால இயற்கைப் பேரிடருக்கான சாத்தியக்கூறுகள், அப்பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்குவதற்கான வசதிகள் குறித்த தகவல்களை சீனா சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. இது மத்திய அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. மாலத்தீவில் இருந்தபடி இந்தியாவைச் சீனா எளிதாக உளவு பார்க்க முடியும் என்பதாலேயே, இந்தியா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

அதேநேரத்தில் இக்கப்பலின் வருகை குறித்து மாலத்தீவு, ’துறைமுகத்திற்கு நுழையத் தேவையான கோரிக்கையைச் சீன அரசு மாலத்தீவு அரசிடம் விடுத்தது. அதன் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளது. அதாவது, கப்பல் ஊழியர்களைச் சுழற்சி முறையில் பணியில் அமர்த்துவது, எரிபொருள் நிரப்புவது உள்ளிட்ட விஷயங்களுக்காகச் சீனா முறையாகக் கோரிக்கை விடுத்ததாக மாலத்தீவு தெரிவித்துள்ளது. எப்போதும் நட்பு நாடுகளின் கப்பல்களை வரவேற்கும் இடமாகவே மாலத்தீவு இருந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியை விமர்சித்த சுப்பிரமணியன் சுவாமி!

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”சீனாவின் கடற்படைக் கப்பலை நிறுத்த மாலத்தீவு அரசு அனுமதித்துள்ளது. இது ஒரு சிறிய தீவின் மூலம் இந்தியாவை அவமதிக்கும் செயலாகும். 2020இல் இருந்து சீனாவால் 4042 சதுர கிலோமீட்டர் லடாக்கைக் கைப்பற்ற முடியும். மேலும் மோடியால் செய்யக்கூடியது எல்லாம் கையாளாகாத ஒட்டகத்தைப்போல சத்தமிட்டு ’கோய் ஆயா நஹின்’ என்று சொல்வதுதான். மோடி, மார்க் தர்ஷன் மண்டல் செல்லும் நேரம்” எனப் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com