வங்கதேசம், இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடத்துவதை எதிர்த்து, ஐசிசிக்கு கடிதம் எழுதியது. முஸ்தபிசூர் ரஹ்மானை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கியதற்கு பதிலாக, வங்கதேசம் இந்தியாவில் விளையாட மாட்டோம் என அறிவித்துள்ளது. ஐசிசி மற்றும் பிசிசிஐ குழப்பத்தில் உள்ளன.
வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் வந்து ஐபிஎல் போட்டியில் விளையாட கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வங்கதேச வீரர் முஸ்தஃபிசூரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
பிசிசிஐயின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வந்து விளையாட மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
இந்தசூழலில் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 3 வாரங்களே மீதமுள்ள நிலையில் என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இருந்துவருகின்றன..
இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு போட்டியை மாற்றுங்கள் என இரண்டு முறை ஐசிசிக்கு வங்கதேசம் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்று கொல்கத்தாவிலிருந்து சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கு போட்டிகளை மாற்ற ஐசிசி பரிசீலித்து வருகிறது.
இந்தசூழலில் தான் இந்தியாவிற்கு வர மறுக்கும் விவகாரம் குறித்து பேசியிருக்கும் வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், “இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றால் மொத்த இந்தியாவிலும் தான், கொல்கத்தாவில் மட்டும் தான் விளையாட மாட்டோம் என்று சொல்லவில்லை. அப்படி கொல்கத்தாவிலிருந்து போட்டியை மாற்ற வேண்டுமானால் இலங்கைக்கு மாற்றுங்கள். பாகிஸ்தான் எங்கள் போட்டிகளை நடத்த விரும்புவதாக அறிக்கைகள் சிலவற்றை பார்த்தேன். அப்படியானால் பாகிஸ்தானில் நடத்துங்கள் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துங்கள் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை” என்று கூறினார்.
மேலும், ”நாங்கள் இரண்டு முறை ஐசிசிக்கு கடிதம் எழுதிவிட்டோம், ஆனால் எங்களுக்கு இன்னும் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை. அதற்கு இடையில் மற்றொரு விசயம் நடந்துள்ளது, அதை நான் உங்களுக்கு கூறவிரும்புகிறேன். வங்கதேச அணியில் 3 விசயங்கள் நடந்தால் எங்களுடைய வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஐசிசியின் பாதுகாப்பு குழு கடிதம் எழுதியுள்ளது.
அதில் முஸ்தஃபிசூரை வங்கதேச அணியில் சேர்த்தாலோ, வங்கதேச ரசிகர்கள் தங்களின் தேசிய அணியின் ஜெர்சியை அணிந்து சுற்றினாலோ, மேலும் தேர்தல் நெருங்குவதாலும் வங்கதேச வீரர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
ஐசிசி பாதுகாப்புக் குழுவின் இந்த அறிக்கை, வங்கதேச அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வந்து விளையாடினால் எந்தவித பாதுகாப்பான சூழலும் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது.
ஒருவேளை எங்களுடைய சிறந்த பந்து வீச்சாளரான முஸ்தஃபிசூரை விடுத்து ஒரு கிரிக்கெட் அணியை உருவாக்குவோம் என்றோ, எங்களுடைய ஆதரவாளர்கள் வங்கதேசத்தின் தேசிய ஜெர்சியை அணிய கூடாது என்றோ, இந்தியாவில் டி20 உலகக்கோப்பை விளையாடுவதற்காக வங்கதேசத் தேர்தலை ஒத்திவைப்போம் என்றோ ஐ.சி.சி எதிர்பார்த்தால், இதை விட வினோதமான, நியாயமற்ற எதிர்பார்ப்பு எதுவும் இருக்க முடியாது.
இந்தியாவில் நிலவும் ஆக்ரோஷமான வங்கதேச எதிர்ப்பு சூழலையும், குறிப்பாக கடந்த 16 மாதங்களாக நடந்து வரும் வங்கதேச எதிர்ப்பு பிரச்சாரத்தையும் கருத்தில் கொண்டு, வங்கதேசம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவது சாத்தியமற்றதாகிவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். முஸ்தாபிசுர் சார்ந்து இந்தியாவில் நடக்கும் விசயமும், அதன்பிறகு, நான் உங்களுக்குக் குறிப்பிட்ட ஐசிசி பாதுகாப்பு குழுவின் கடிதமும் சந்தேகத்திற்கு இடமின்றி இதை நிரூபித்துள்ளன.
ஐசிசி உண்மையிலேயே ஒரு உலகளாவிய அமைப்பாக இருக்க விரும்பினால், இந்தியாவின் கட்டளைக்கு ஐசிசி செவிசாய்க்கவில்லை என்றால், டி20 உலகக் கோப்பையில் விளையாட எங்களுக்கு இலங்கையில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த சமரசமும் செய்ய மாட்டோம், எங்கள் அணியின் வீரர்களில் ஒருவருக்கு விளையாடும் சூழல் இல்லாதபோது, இந்திய தேசிய கிரிக்கெட் வாரியம், அங்கு நிலவும் சூழ்நிலைகளுக்கு தலைவணங்கி முஸ்தஃபிசூரை அங்கு விளையாட அனுமதிக்கக்கூடாது என்று கூறும்போது, எங்களுக்கு அங்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்பதற்கு ஐசிசிக்கு வேறு என்ன ஆதாரம் தேவை என்று எனக்குப் புரியவில்லை" என்று அவர் கூறினார்.