சென்னையில் வங்கதேச உலகக்கோப்பை போட்டிகள்.. பரிசீலித்துவரும் ஐசிசி மற்றும் பிசிசிஐ!
வங்கதேசத்தில் நடந்த வன்முறையால் ஐபிஎல் தொடரில் இருந்து முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் போட்டிகளை நடத்த பரிசீலிக்கின்றன.
வங்கதேசத்தில் நடந்துவரும் வன்முறை கலவரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட நிலையில், வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் இந்தியாவில் வந்து ஐபிஎல் போட்டியில் விளையாட கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் வங்கதேச வீரரை ஐபிஎல் தொடரிலிருந்து நீக்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
பிசிசிஐயின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த வங்கதேச கிரிக்கெட் வாரியம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கோப்பையில் வந்து விளையாட மாட்டோம் என ஐசிசிக்கு கடிதம் எழுதியது. மேலும் ஐபிஎல் தொடரை வங்கதேசத்தில் ஒளிபரப்பவும் தடை விதித்துள்ளது.
இந்தசூழலில் உலகக்கோப்பை தொடங்க இன்னும் 3 வாரங்களே மீதமுள்ள நிலையில் என்ன செய்வதென்ற குழப்பத்தில் ஐசிசி மற்றும் பிசிசிஐ இருந்துவருகின்றன..
சென்னை, திருவனந்தபுரத்தில் நடத்த திட்டம்..
வங்கதேசத்தின் கோரிக்கையின் படி இலங்கையில் போட்டியில் நடத்துவதில் மைதானங்களின் பற்றாக்குறையால் சிக்கல் நீடிக்கும் நிலையில், ஐசிசி மற்றும் பிசிசிஐ இரண்டு தரப்பும் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் போட்டியை நடத்த பரிசீலித்துவருவதாக கிறிக்பஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை சிதம்பரம் மைதானத்தில் ஏற்கனவே உலகக்கோப்பை போட்டிகள் நடக்கவிருக்கும் நிலையிலும், மைதானத்தில் நிறைய ஆடுகளங்கள் இருப்பதால் போட்டிகளை நடத்துவதில் எந்த சிக்கலும் இல்லை என தமிழ்நாடு வாரியம் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளா வாரியத்திடம் இருந்தும் ஒத்துழைப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அட்டவணையின் படி வங்கதேசத்தின் 4 போட்டிகளில் ஒன்று மும்பையிலும், மற்ற போட்டிகள் கொல்கத்தாவிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இந்தசூழலில் ஐசிசி மற்றும் பிசிசிஐ முடிவுக்கு வங்கதேசம் ஒத்துழைக்குமா அல்லது பிரச்னை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

