ஜெய் ஷா, ரோகித் சர்மா எக்ஸ் தளம்
கிரிக்கெட்

சாம்பியன்ஸ் டிராபி | மேடைக்கு அழைக்கப்படாத பாகி. அதிகாரி.. வெடித்த சர்ச்சை!

துபாயில் நடைபெற்ற சாம்பியன் டிராபி நிறைவு விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) அதிகாரியை மேடைக்கு அழைக்க ஐசிசி தவறியது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.

Prakash J

8 அணிகள் கலந்துகொண்ட சாம்பியன்ஸ் டிராபி, 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெற்றது. இந்தத் தொடரின் பெரும்பாலான போட்டிகள் பாகிஸ்தானிலும், பாதுகாப்பு காரணமாக பிசிசிஐ கேட்டுக்கொண்டதன் பேரில் இந்திய அணியின் போட்டிகள் துபாய்க்கும் மாற்றப்பட்டன. அதன்படி, நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை இந்திய அணி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

துபாயில் நடைபெற்ற இதன் நிறைவு விழாவிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) அதிகாரியை மேடைக்கு அழைக்க ஐசிசி தவறியது தொடர்பாக சர்ச்சை வெடித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், போட்டி இயக்குநருமான சுமைர் அகமது போட்டியின்போது மைதானத்தில்தான் இருந்துள்ளார். எனினும், தொடரின் நிறைவு விழாவிற்கு அவர் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, "ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொசின் நக்வி துபாய் செல்லவில்லை. எனினும், அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாகிஸ்தான் சார்பில் துபாய் வந்திருந்தார்" என்று கூறப்படுகிறது.

ஐசிசி தலைவர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் தேவ்ஜித் சைகியா ஆகியோர் வீரர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகளை வழங்கினர். சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரை நடத்திய நாடு (பாகிஸ்தான்) என்ற வகையில், அதன் நிறைவு விழாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர்கூட அழைக்கப்படாத சம்பவம் குறித்து ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்கும் என்று தெரிகிறது. இதற்கிடையே, இறுதி விழாவை ஏற்பாடு செய்வதற்குப் பொறுப்பான ஐசிசி நபர்களுடன் தலைமை நிர்வாக அதிகாரி சரியாகத் தொடர்புகொள்ள முடியாமல் போயிருக்கலாம் என்றும் அல்லது வேறு ஏதோ காரணங்களால் அவர் விடுபட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயிப் அக்தர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர், "இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. ஆனால் இறுதிப் போட்டிக்குப் பிறகு PCB-யிலிருந்து எந்த பிரதிநிதியும் இல்லை என்பதை நான் கவனித்தேன். பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துகிறது. எனக்கு அது புரியவில்லை. கோப்பையை வழங்க ஏன் பிசிபியிலிருந்து யாரும் அங்குச் செல்லவில்லை? இது சிந்திக்க வேண்டிய ஒன்று. இது உலக அரங்கம், நீங்கள் இங்கே இருந்திருக்க வேண்டும்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.