இந்தியா - பாகிஸ்தான் இறுதிப்போட்டி மோதல்கள் cricinfo
கிரிக்கெட்

40 ஆண்டில் 5 முறை IND-PAK ஃபைனல்.. அதிக கோப்பையுடன் பாகிஸ்தான் முன்னிலை!

2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் வரும் ஞாயிற்று கிழமை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Rishan Vengai

  • இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் எத்தனை முறை இறுதிப்போட்டியில் மோதி உள்ளன?

  • இறுதிப்போட்டியில் இந்தியாவை அதிகமுறை வீழ்த்தியுள்ள பாகிஸ்தான்

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இருநாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் காரணமாக இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்துவருகின்றன. என்றாலும், இரண்டு அணிகளுக்கான மோதல் எப்போது நடந்தாலும் அதுஒரு திருவிழா போலவே உலக கிரிக்கெட்டில் அங்கம் வகிக்கிறது. வரலாற்றில் அதற்கான சான்றுகள் அதிகம் இருக்கின்றன, எடுத்துக்காட்டாக 2007 டி20 உலகக்கோப்பை ஃபைனல், 2022 டி20 உலகக்கோப்பை லீக் போட்டி என மைதானத்தின் பார்வையாளர்கள் தொடங்கி, மொபைல், டெலிவிசன் பார்வையாளர்கள் என அனைத்திலும் சாதனை படைத்து வரலாறாக மாறியது இந்தியா-பாகிஸ்தான் போட்டி.

2007 t20 wc final

இந்நிலையில் 2025 ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா-பாகிஸ்தான் அணிகள் தகுதிபெற்றுள்ளன. வரும் 28-ம் தேதி ஞாயிற்று கிழமையன்று இவ்விரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதலானது சர்ச்சைகளுக்கு நடுவே அதிக எதிர்ப்பார்ப்பை கூட்டியுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் மோதல்

பஹல்காம் தீவிரவாத தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும்விதமாக இந்தியா நடத்திய ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை என்பதை எல்லாம் தாண்டி, 2025 ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்களின் மோதலனாது ஒருபடி உச்சம் தொட்டுள்ளது. பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள், பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை விமர்சிக்கும் வகையில் செய்த துப்பாக்கி சுடுதல் செலப்ரேசன், அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய வீரர்களின் பதிவுகள் என நடப்பு 2025 ஆசியக்கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சர்ச்சைகளில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளன.

சாஹிப்சாதா ஃபர்ஹான் துப்பாக்கி செலப்ரேஷன்

இந்தசூழலில் 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை சந்தித்தால் ’நாங்கள் கோப்பை வெல்லுவோம்’ என பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி கூறியுள்ளார்.

தற்போது இரண்டு அணிகளுக்கும் இடையே இறுதிப்போட்டியானது உறுதியாகிவிட்ட நிலையில், இதற்கு முன்பு எத்தனை முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஃபைனலில் மோதியுள்ளன, அதில் எந்த அணி அதிகமுறை கோப்பைகள் வென்றுள்ளது என்பதை பார்க்கலாம்..

அதிக கோப்பைகளுடன் பாகிஸ்தான் முன்னிலை..

1984 முதல் நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதிக்கொண்டதே இல்லை. ஆனால் 1986 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை மோதலின் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தின. அதில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது.

1986 ஆசிய கோப்பை ஃபைனல்

அதேபோல 1994 ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை இறுதிப்போட்டியிலும் 39 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது பாகிஸ்தான். கடைசியாக இரு அணிகளும் மோதிக்கொண்ட 2017 சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.

2017 சாம்பியன்ஸ் டிராபி

இந்திய அணியை பொறுத்தவரை 1985 உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பதிவுசெய்தது. அதுபோக 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானிடமிருந்து கோப்பையை தட்டிப்பறித்தது இந்தியா.

World Championship of Cricket 1985

1985 முதலான 40 வருட கிரிக்கெட் வரலாற்றில் 5 முறை இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியுள்ள நிலையில், அதில் பாகிஸ்தான் அணி 3-2 என முன்னிலை வகிக்கிறது. இந்தசூழலில் 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து 3-3 என சமன்செய்யும் என்ற எதிர்ப்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.