காலே டெஸ்டில் இந்தியா 462 ரன்கள் குவித்தபின், இலங்கை 284 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 372 ரன்கள் இலக்கை துரத்தும் இலங்கை இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால்-டிக்வெல்லா இடையேயான காரசார உரையாடல், ஐபிஎல் அழைப்பு, சிக்ஸர் சவால் என ரசிகர்களை கவர்ந்த தருணமாக வைரலாகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 462 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 90 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தபோதும் சோனல் மற்றும் டிக்வெல்லாவின் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் உதவியால் 284 ரன்கள் எடுத்தது.
178 ரன்கள் முன்னிலைபெற்ற இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், இலங்கை அணி 372 ரன்கள் இலக்கை நோக்கி 4வது இன்னிங்ஸில் விளையாடிவருகிறது.
கடைசிநாளான இன்று நடைபெற்றுவரும் போட்டியில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தபிறகு கைக்கோர்த்த சோனல் மற்றும் டி சில்வா இருவரும் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினார். டி சில்வா 59 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய டிக்வெல்லா பேட்டிங் செய்ய வந்தார்.
அப்போது 10 ரன்களுடன் அவர் பிரசித் கிருஷ்ணாவிற்கு எதிராக விளையாடியபோது ஸ்கொயர் லெக்கில் நின்றிருந்த ஜெய்ஸ்வால், என்னப்பா, முதல் இன்னிங்ஸில் நிறைய ஷாட்கள் அடிச்ச. இப்போ அடிக்க மாட்டிங்கிற, இப்போது ஒன்றைப் பார்க்க வேண்டும், வா அடி’ என டிக்வெல்லாவிடம் பேசினார்.
அதற்கு பதிலளித்த அவர், அப்படியா? என கேட்க, ஜெய்ஸ்வால் ‘ஆமாம், நான் பார்க்க விரும்புகிறேன். வா, முடிஞ்சா அடிச்சு காட்டு. அங்கே அடி (டீப் ஸ்கொயர் லெக்கை நோக்கி சுட்டிக்காட்டி) ஏன் அடிக்க முடியாதா? என்று பதிலளித்தார்.
அதற்கு டிக்வெல்லா, என்னை ஐபிஎல் அழைத்துப்போ அங்கு வந்து அடிக்கிறேன் என கூறினார். கண்டிப்பா கூட்டிட்டு போவோம், 100%. வா, முதல்ல அவருக்கு எதிரா ஒரு சிக்ஸர் அடி, நான் உன்னை ஐபிஎல்-க்கு அழைத்துச் செல்கிறேன்” என கூற, அதற்கு மேல் பதில் சொல்லாத டிக்வெல்லா ‘நன்றி’ என கூறி முடித்துவிட்டார். ஆனால் அதேஓவரின் கடைசி பந்தில் அவரசப்பட்டு ஷாட் ஆட முயற்சித்த டிக்வெல்லா எட்ஜ் செய்து அவுட்டாகி வெளியேறினார். இச்சம்பவத்தை ரசிகர்கள் ஷேர் செய்துவருகின்றனர்.