முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மெக்ராத், உலகின் சிறந்த டி20 பவுலர்களாக இருவரது பெயரை குறிப்பிட்டுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பை பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகளில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
நடப்பு சாம்பியனான இந்தியா கோப்பை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படும் நிலையில், நாளை நடக்கும் முதல் அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் நாளை மறுநாள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவிருக்கின்றன.
இந்நிலையில் 2026 டி20 உலகக்கோப்பை குறித்து பேசியிருக்கும் முன்னாள் ஜாம்பவான் க்ளென் மெக்ராத், ஆஸ்திரேலியா தொடரிலிருந்து வெளியேறியது ஆச்சரியமளிக்கவில்லை என்றும், அவர்கள் லீக் சுற்றோடு வெளியேறவில்லை என்றால் சூப்பர் 8-ல் வெளியேறியிருப்பார்கள் என தெரிவித்தார்.
இந்திய அணி குறித்து பேசிய அவர், “இங்கிலாந்தை இந்தியா எளிதாக எடுத்துக்கொள்ள கூடாது. அவர்கள் ஒரு ஆபத்தான அணி, அவர்களுக்கு அன்றைய நாளாக இருந்தால் எதுவேண்டுமானாலும் நடக்கலாம்.
முதலில், டாஸ் வென்று என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதை பொறுத்தே எல்லாம் இருக்கிறது. இந்தியா ஒரு நல்ல பந்துவீச்சுத் தாக்குதலைக் கொண்டுள்ளது. அர்ஷ்தீப் சிங் சிறப்பாகச் செயல்படுகிறார், பும்ரா தரமானவர். அர்ஷ்தீப் இந்தியாவின் முதன்மை பவுலராக, ஆனால் பும்ரா ஒரு பிக் மேட்ச் பிளேயர். சில நேரங்களில் பெரிய ஆட்டங்களின் போது, இந்த வீரர்கள் தங்கள் ஆட்டத்தை மேலும் உயர்த்துகிறார்கள். அவர்கள் அந்த பெரிய தருணங்களை, பெரிய ஆட்டங்களை மிகவும் விரும்புகிறார்கள். அதனால் பெரிய போட்டிகளைப் பொறுத்தவரை பும்ரா மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நான் எப்போதும் அவருக்கு ஒரு பெரிய ரசிகன்.
என்னைப் பொறுத்தவரை பும்ரா மற்றும் ஹசல்வுட் இருவரும் உலகின் 2 சிறந்த பவுலர்கள். இரண்டு பேரும் டெஸ்ட் மேட்ச் லெந்தில் பந்துவீசினாலும் ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.