கவுதம் கம்பீர்
கவுதம் கம்பீர் web
கிரிக்கெட்

“240 ரன்கள் வைத்து விளையாடுவதற்கு இது ஒன்றும் 1990 அல்ல”-கே.எல்.ராகுல் பேட்டிங் மீது கம்பீர் ஆதங்கம்

Rishan Vengai

2003 இறுதிப்போட்டிக்கான பழிதீர்ப்பு, 2015 அரையிறுதிப்போட்டிக்கான பழிதீர்ப்பு என்றெல்லாம் சொல்லப்பட்ட இந்தியா-ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியானது, இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத வண்ணம் ஆஸ்திரேலியாவின் பக்கம் சென்றது இன்னும் ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்துவருகிறது.

IND vs AUS

தன் நாடு பலவருடங்களாக வாங்கிய அடிக்கு பழிதீர்த்து கோப்பையை ஏந்தும் என்ற நம்பிக்கையோடு திரண்டு வந்த 1.25 லட்சம் மக்களின் கனவானது மைதானத்திலேயே கருகிப்போனது. தொடர் முழுவதும் தொட்டதெல்லாம் தங்கமாக ஜொலித்துவந்த இந்திய அணி சிறுசிறு தவறுகளால் கோப்பை வெல்வதற்கான பெரிய போட்டியில் கோட்டைவிட்டது.

இந்நிலையில் இந்திய அணி உலகக்கோப்பை சாம்பியானாக மாறவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர், இந்திய அணி தைரியமாக ஆடவில்லை என்று வேதனையோடு தெரிவித்துள்ளார்.

இந்திய அணியிடம் தைரியம் இல்லை! - கம்பீர்

ஸ்போர்ட்ஸ்கீடா உடன் பேசியிருக்கும் கவுதம் கம்பீர், “உலகக்கோப்பை இறுதிப்போட்டி என்பது இரு முனை வாள் போன்றது. அதில் தைரியமாக ஆடும் அணியே உலகக் கோப்பையை வெல்லும். இதைத்தான் நான் எப்போதும் கூறி வருகிறேன். விக்கெட் விழுந்த போது பார்ட்னர்ஷிப்பை உருவாக்க உங்களுக்கு நேரம் தேவை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட 11 முதல் 40 ஓவர்கள் என்பது மிக மிக நீண்ட நேரமாகும். இரண்டு வீரரில் யாராவது ஒருவர் அந்த ஆபத்தை எடுத்திருக்க வேண்டும்.

கோலி - கேஎல் ராகுல்

இந்திய அணியின் முதல் 6-7 பேட்டர்களும் அதிரடியாக விளையாடி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தால் கூட உண்மையில் நான் மகிழ்ச்சியடைந்திருப்பேன். மாறாக ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் உங்களால் 240 ரன்களை வைத்துக்கொண்டு வெற்றிபெற முடியும் என்று நீங்கள் நினைத்தால், அப்படி போராடும் இடம் இறுதிப்போட்டியல்ல. நீங்கள் ஒன்று 150 ஆல் அவுட் அல்லது 300 ரன்கள் என ஆடியிருக்க வேண்டும். அந்த தைரியமான அணுகுமுறைதான் இந்திய அணியிடம் இல்லாமல் போய்விட்டது. இதனால்தான் இந்தியா ஐசிசி இறுதிப்போட்டிகளில் வெற்றிபெறவில்லை. 'நான் அவுட் ஆனாலும் நீங்கள் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும்' என்று ரோகித் சர்மா ஆட்டத்திற்கு முன்பே மற்றவீரர்களிடம் சொல்லியிருக்க வேண்டும்.

indian team 2023

இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடும் ரோலில் கோலி பங்கு வகித்துள்ளார். அதனால் அவருக்கு பக்கபலமாக மற்றவீரர்கள் அதிரடிக்கு சென்றிருக்க வேண்டும். அந்த இடத்தில் KL ராகுல் ஆக்ரோஷமாக செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பெரிதாக என்ன தீங்கு விளைந்திருக்கும்? நீங்கள் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருப்பீர்கள். ஆனால் களத்தில் தைரியமாக இருந்திருந்தால், உங்களால் 310 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும். தற்போது இந்தியா உலக சாம்பியனாக இருந்திருக்கும், அதைவிட உங்களுக்கு வேறென்ன வேண்டும்? 240 என்பது ரன்களை வைத்து விளையாடுவதற்கு, இது ஒன்றும் 1990 காலகட்டம் அல்ல. இதில் வெற்றிபெற உங்களுக்கு 300-க்கும் மேற்பட்ட ரன்கள் தேவை. இந்தியா இறுதிப்போட்டியில் தைரியமாக செல்லவில்லை” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.