தோற்றது நீலம் அணிந்த அணி இல்ல... தவறான கைகளில் சிக்கிய கிரிக்கெட்..!

அதே மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டபோது ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி 'ஜெய் ஶ்ரீ ராம்' என்ற கோஷத்தை எழுப்பினார்கள். அதையெல்லாம் விட மோசமாக, அந்த மைதானத்திலேயே அந்தப் பாட்டைப் போட்டு கீழ்த்தரமாக நடந்துகொண்டனர்.
world cup final
world cup finalpt web

'.... வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது' எந்த பத்திரிகையும் ஒரு பெரும் விளையாட்டுத் தொடர் முடிந்ததும் எழுதும் முதல் வார்த்தை இதுதான். ஆனால் இந்த 2023 உலகக் கோப்பை தொடர் பற்றி நம்மால் அப்படி எழுதிட முடியுமா? இல்லை இல்லை, இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோற்றுவிட்டதால் அப்படிச் சொல்லிடவில்லை. ஒரு தொடரின் வெற்றி என்பது நமது நாட்டைச் சார்ந்த அணி வெல்வதில் இல்லை.

ஒரு தொடரை நடத்தும் தேசம், அதை வெற்றிகரமான தொடர் என்று சொல்லவேண்டுமெனில், அது நல்லபடியாக நடந்து முடிந்திருக்கவேண்டும். அந்த நாட்டு அணியின் முழுமையான செயல்பாட்டை சார்ந்தது இல்லை.

மற்ற தேசத்து ரசிகர்களின் திருப்தி மிகமுக்கியம். மற்ற நாட்டு அணிகள் வசதியாக, பாதுகாப்பாக உணரவேண்டும். இதிலெல்லாம் இந்த உலகக் கோப்பையை நடத்திய இந்தியா தோற்றிருக்கிறது. இதையெல்லாம்விட மோசமாக சில போட்டிகள் சொந்த நாட்டு ரசிகர்களையே வருத்தப்படவும் கோவப்படவும் வைத்திருக்கிறது.

எங்கிருந்து தொடங்குவது!

உலகக்கோப்பை அட்டவணை வெளியிட்டதிலிருந்தே பிரச்னை தொடங்கியது. உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் போர்டாக இருந்தாலும் சிறுபிள்ளைத்தனமான அரசியல்கள் செய்தது பிசிசிஐ. மிகவும் தாமதமாக அட்டவணை வெளியிட்டதே உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

வெளிநாட்டு ரசிகர்கள் சரியாக தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு அவாகசம் இல்லையென்று புலம்பிக்கொண்டிருக்க, அதற்கும் ஒருபடி மேலே சென்று, இந்து பண்டிகைகளைக் காரணம் காட்டி போட்டியின் தேதிகளை மாற்றியது பிசிசிஐ.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை அஹமதாபாத்தில்தான் நடத்தவேண்டும் என்று கங்கனம் கட்டியிருந்தது. அடுத்தகட்டமாக டிக்கெட் ரிலீஸ் செய்ததில் வழக்கம்போல் ஆயிரம் குழப்பங்கள். உள்ளூர் ரசிகர்கள் முதல் உலக ரசிகர்கள் வரை அனைவரும் விமர்சனம் செய்தார்கள்.

இவையெல்லாம் வெறும் டிரெய்லர்தான் என்று அப்போது யாரும் நினைத்திருக்கவில்லை. உலகக் கோப்பை தொடங்கியபிறகு இந்தியா கிரிக்கெட் உலகில் விமர்சனங்களை அடுக்கடுக்காக சந்திக்க நேரிட்டது. அட்டவணை பிரச்னை, டிக்கெட் வாங்குவதில் சவால் என்றால்கூட சமூக வலைதள விமர்சனங்களோடு கடந்திருக்கும். ஆனால், எல்லாம் எல்லை மீறியது.

உலகக் கோப்பையின் முதல் போட்டியே முக்கால் வாசி மைதானம் நிரம்பாத நிலையில் நடந்தது. அதே மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டபோது ரசிகர்கள் பாகிஸ்தான் வீரர்களை நோக்கி 'ஜெய் ஶ்ரீ ராம்' என்ற கோஷத்தை எழுப்பினார்கள். அதையெல்லாம் விட மோசமாக, அந்த மைதானத்திலேயே அந்தப் பாட்டைப் போட்டு கீழ்த்தரமாக நடந்துகொண்டனர்.

world cup final
அரங்கெங்கும் ஒலித்த ஜெய் ஶ்ரீ ராம் கோஷம்; அஹமதாபாத் ரசிகர்கள் செய்தது அநாகரிகத்தின் உச்சம்!

இதை பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமல்ல, கிரிக்கெட் ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் விமர்சித்தார்கள். அடுத்ததாக வங்கதேச ரசிகர்களை இந்திய ரசிகர்கள் தாக்கியது; சேவாக், இர்ஃபான் பதான் போன்றவர்கள் பாகிஸ்தான் அணியை கேலி செய்தது என கணக்கில்லாமல் ரசிகர்கள், நிர்வாகிகள், முன்னாள் வீரர்கள் என இந்தியாவின் அனைத்து தரப்பினரும் விமர்சனங்களால் துளைக்கப்பட்டனர்.

கடைசியாக இறுதிப் போட்டியிலும் இவர்கள் விமர்சனங்களுக்குத் தப்பிவிடவில்லை. 1.3 லட்சம் இருக்கைகள் கொண்ட உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தில், அத்தனை டிக்கெட்டுகளும் விற்கப்பட்டும் 90,000 ரசிகர்களே இறுதிப் போட்டியைப் பார்த்திருக்கிறார்கள். சரி வந்தவர்களாவது இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தார்களா? அதுவும் இல்லை. இந்தியா பின்தங்கியவுடன் மொத்த மைதானமும் அமைதியாகிவிட்டது.

world cup final
”ஆர்ப்பரிக்க போகும் 1.30 லட்சம் ரசிகர்கள்.. எங்கள் இலக்கு இதுதான்” - பேட் கம்மின்ஸ் பரபரப்பு கருத்து

'இதற்குத்தான் மும்பை, சென்னை போன்ற ஊர்களில் ஃபைனலை நடத்தியிருக்கவேண்டும்' என்று மற்ற ஊர் ரசிகர்கள் பொங்குகின்றனர்.

சரி, அதோடுவிட்டார்களா? உலகக்கோப்பையின் முதல் போட்டி, ஃபைனல் என எல்லாமே அந்த மைதானத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. மைதானத்தை ஒதுக்கினாலும் ரசிகர்கள் வர வேண்டுமே.

பிசிசிஐ-யின் டிக்கெட் குளறுபடிகலால் பெரும் செல்வந்தர்களே இப்படியான முக்கிய போட்டிகளில் டிக்கெட் வாங்க முடிகிறது. அதிலும் பாதிப்பேர் மைதானத்துக்கு வருவதில்லை. மிச்சம் மீதி வருபவர்களும் மதச்சாயம் கரை படிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். மனிதம் என்பதோ மரியாதை என்பதோ கொஞ்சமும் இல்லாதவர்களாக, போலி தேசப் பற்றை, மத கோஷங்களை வெளிப்படுத்துபவர்களாகவுமே இருக்கிறார்கள். நிர்வாகம் முதல் போலியான ரசிகர்கள் வரை இப்படி இருக்கும்போது கிரிக்கெட்டை நேசிப்பவர்களுக்கும் மனிதர்களை மரியாதையோடு அணுகுபவர்களுக்கும் அருவருப்பாகத்தானே இருக்கும்.

இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரான சர்தேசாய் ராஜ்தீப் X பக்கத்தில், "உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு, கபில் தேவ் உட்பட அனைத்து முன்னாள் இந்திய ஜாம்பவான்களுக்கும் அழைப்பு விடுங்கள். அடுத்த முறை உலகக்கோப்பை நடத்தும்போது, மும்பையில் போட்டியை நடத்துங்கள்" என பதிவிட்டிருந்தார்.

அடுத்த முறை இந்தியாவில் உலகக் கோப்பையை நடத்தத் திட்டமிடும்போது, அதையொரு உலகக்கோப்பையாக கருதுங்கள். இந்தியாவில் நடக்கும் மற்றுமொரு போட்டியாக நினைத்துக்கொண்டு நடத்தாதீர்கள்.

மூத்த பத்திரிகையாளர் சர்தேசாய் ராஜ்தீப்

சர்தேசாய் ராஜ்தீப்
சர்தேசாய் ராஜ்தீப்

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக செய்திருப்பது இதுதான். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மதச்சாயம் பூசிவிட்டது. மைதானங்களுக்கு பிஜேபி தலைவர்கள் பெயர் வைப்பது (ஃபெரோஷா கோட்லா மைதானம் அருண் ஜெட்லி மைதானமானது ), மைதான இருக்கைகளுக்கு காவி நிறம் அடிப்பது, இந்திய அணியின் பிராக்டீஸ் ஜெர்சியைக் கூட காவியாக்கியது, நீல நிற இந்திய ஜெர்ஸியில் காவியை டிசைனாக சேர்த்தது என கிட்டத்தட்ட கிரிக்கெட்டுக்கே வேறொரு நிறத்தை பூசிவிட்டார்கள்.

இப்படியொரு நிர்வாகத்துக்கும், மக்களுக்கும் மத்தியில் மாட்டிக்கொண்ட கிரிக்கெட் எப்படி செழிக்கும். பல இந்திய ரசிகர்களே, இந்தியா தோற்றதால் ஆசுவாசப்பட்ட சூழ்நிலை இங்கே ஏற்பட்டிருக்கிறது. காரணம், அந்த வெற்றி இந்துத்துவத்தின் வெற்றியாக மாற்றப்பட்டிருக்கும். அதை சகிப்பதற்கு தோல்வியை ஏற்றுக்கொள்ளலாம் என்ற மனநிலைக்கு நிறையப் பேர் சென்றுவிட்டார்கள். பிஜேபி-யும் அதன் பின் நிற்கும் மதவாதிகளும் கிரிக்கெட் ரசிகர்களை அப்படியொரு இடத்தில்தான் இப்போது நிறுத்தியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com