பாகிஸ்தான் கிரிக்கெட்டை கடுமையாக சாடிய முன்னாள் வீரர் அஹ்மத் ஷெசாத் web
கிரிக்கெட்

“கென்யா, உகாண்டா உடன் தான் பாகிஸ்தானை சேர்க்கணும்..” - இந்தியாவை ஒப்பிட்டு சாடிய PAK வீரர்!

2026 டி20 உலகக்கோப்பையை இந்தியா வென்றதற்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஒருவர்.

Rishan Vengai

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா அபார வெற்றி பெற்றதை முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஹ்மது ஷசாத் பாராட்டியுள்ளார். பாகிஸ்தானின் கிரிக்கெட் அமைப்பை விமர்சித்த அவர், இந்தியாவின் திறமை மற்றும் வலுவான அமைப்பு வீரர்களை உருவாக்குகிறது என்று கூறினார். பாகிஸ்தானை கென்யா, உகாண்டா போன்ற அணிகளுடன் சேர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

2026 டி20 உலகக்கோப்பை தொடரில் டாமினேட் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, அரையிறுதிப்போட்டி, இறுதிப்போட்டி இரண்டிலும் 250 ரன்களுக்கு மேல் அடித்து அபார வெற்றியை பதிவுசெய்தது.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்தியா

இந்திய அணி 3வது முறையாக உலகக்கோப்பையை வென்று மகுடம் சூடியிருக்கும் அதேவேளையில், முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஹ்மது ஷசாத் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் நிலையை படுமோசமாக விமர்சித்தார்.

இந்திய கிரிக்கெட்டை பாராட்டிய ஷெசாத்..

2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வென்றதற்கு பிறகு உரையாடல் ஒன்றில் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் அஹமது ஷெசாத், "பாகிஸ்தானில் திறமைக்கு பஞ்சமில்லை. ஆனால் நமது கிரிக்கெட் கட்டமைப்பு குறைபாடுடையதாக இருக்கிறது. இந்தியாவில், அவர்களிடம் திறமை மற்றும் வலுவான அமைப்பு இரண்டும் உள்ளன, மேலும் அந்த அமைப்பு வீரர்களை தொடர்ந்து உருவாக்குகிறது.

2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி

உதாரணமாக சஞ்சு சாம்சனை எடுத்துக் கொள்ளுங்கள், அவருக்கு வாய்ப்புகள் கூட கிடைக்கவில்லை, இறுதியாக அவர் அதைப் பெற்றபோது, உலகக் கோப்பையில் தொடர் நாயகனாக மாறினார். பின்னர் இஷான் கிஷனை பாருங்கள், அவர் ஒழுக்கப் பிரச்சினைகள் காரணமாக அணியிலிருந்து சிறிது காலம் ஓரங்கட்டப்பட்டார். அவர் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்குச் சென்றார், சிறப்பாக செயல்பட்டார், அணிக்குத் திரும்பினார். தற்போது அணியில் தாக்கத்தை ஏற்படுத்தும் இன்னிங்ஸை விளையாட எப்போதும் தயாராக இருக்கிறார்.

இன்னொரு பக்கம் அபிஷேக் சர்மாவைப் பாருங்கள் அவர் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தார்? ஆனால் இறுதிப் போட்டியில் அவர் 18 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தன்னால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டினார்" என்று இந்திய நிர்வாகத்தையும், இந்திய வீரர்களையும் பாரட்டினார்..

பாகிஸ்தான் கிரிக்கெட்டை கிழித்த முன்னாள் வீரர்..

தொடர்ந்து பேசிய அவர், இந்திய அணி பி, சி அல்லது டி வரிசை அணிகளாக ஜிம்பாப்வே, உகாண்டா அல்லது கென்யாவை வீழ்த்தி அந்த புள்ளிவிவரங்களை பொதுமக்களுக்குக் காட்டவில்லை. அவர்கள் பெரிய அணிகளுக்கு எதிராக அதைச் செய்கிறார்கள், பெரிய போட்டிகளிலும் பெரிய தொடர்களிலும் விளையாடுகிறார்கள். இறுதிப் போட்டியில் இதுபோல் செயல்படுவது இந்தியாவுக்குப் புதிதல்ல. நல்ல அணிகள் சரியான நேரத்தில் உச்சத்தை அடைகின்றன.

இறுதிப்போட்டியில் கடைசி ஓவர்களில் பந்துமெதுவாகி நியூசிலாந்திற்கு உதவியது, இல்லையென்றால் அவர்கள் 270-280 ரன்களை அடித்திருப்பார்கள். அதே பாகிஸ்தானாக இருந்திருந்தால் 180 ரன்களை அடித்துவிட்டு, பவுலர்கள் தக்கவைத்துக்கொள்ளட்டும் என விட்டிருப்பார்கள்.

நீங்கள் ஜிம்பாப்வே, கென்யா மற்றும் உகாண்டாவை தொடர்ந்து அழைத்துவந்து, அவர்களை வீழ்த்தி, நீங்கள் தான் நம்பர் ஒன் அணி என்று உங்களை அழைத்துக் கொண்டால், அதில் எந்த சாதனையும் கிடையாது. தரவரிசையில் இருந்து முதல் ஐந்து அல்லது ஆறு அணிகளை நீக்க ஐ.சி.சி-யிடம் கேட்க வேண்டும். பின்னர் கென்யா, உகாண்டா மற்றும் ஜிம்பாப்வேயுடன் பாகிஸ்தானையும் சேர்த்து தரவரிசையை உருவாக்கவேண்டும்" என்று கடுமையாக விமர்சித்தார்.