பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சர்ச்சைக்குரிய ரன்அவுட்டில் சிக்கினார். வங்கதேச வீரர் மெஹிதி ஹாசன் அவரை மறித்து நின்றதால், சல்மான் க்ரீஸுக்கு திரும்ப முடியவில்லை. பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி இதை சச்சினின் 1999 ரன்அவுட்டுடன் ஒப்பிட்டு, வங்கதேச வீரருக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்தியாவிற்கு வந்து டி20 உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம் என சொன்ன வங்கதேசத்திற்கும், அதற்கு ஆதரவளித்த பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது ரசிகர்கள் மோதல் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு சென்று பாகிஸ்தான் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவரும் நிலையில், நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா சர்ச்சைக்குரிய வகையில் ரன்அவுட் செய்யப்பட்டார். அந்த ரன்அவுட்டை வங்கதேச கிரிக்கெட் ‘பிரிலியண்ட் ரன் அவுட்’ என கூறியிருக்கும் நிலையில் பாகிஸ்தான் ரசிகர்கள் அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அடித்த சல்மான் ஆகா 64 ரன்களுடன் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது தான், அந்த ரச்சை ரன் அவுட் நடந்தது. 39வது ஓவரை வீசிய வங்கதேச ஸ்பின்னர் மெஹிதி ஹாசனின் 4வது பந்தை எதிர்கொண்ட முகமது ரிஸ்வான், பந்தை நேராக நான் ஸ்ட்ரைக்கராக நின்றுகொண்டிருந்த சல்மான் ஆகாவிடம் அடித்தார். அப்போது க்ரீஸை விட்டு வெளியே நின்றிருந்த சல்மான் ஆகா, மீண்டும் க்ரீஸுக்கு செல்ல திரும்பியபோது பந்தை பிடிக்க சென்ற மெஹிதி ஹாசன் அவரை மறித்து நின்றார்.
அதனால் க்ரீஸுக்கு திரும்பி செல்வதைவிட்டு கேசுவலாக பந்தை எடுத்து பவுலருக்கு உதவிசெய்ய நினைத்தார் சல்மான் ஆகா. ஆனால் பந்தை வேகமாக எடுத்த வங்கதேச பவுலர் மெஹிதி ஹாசன், நேராக ஸ்டம்பை அடித்து அவுட் கேட்டார். அதை பெரிதும் எதிர்ப்பார்க்காத சல்மான் நான் உனக்கு உதவிசெய்ய தானே நினைத்தேன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நீ வெளியே தான் நின்றுகொண்டிருந்தாய் என மெஹிதி ஹாசன் கூற, முடிவு 3வது அம்பையருக்கு சென்றது. அவர் அவுட் என சிக்னல் கொடுக்க கோபத்தில் கைக்கிளவுஸை எறிந்துவிட்டு வெளியேறினார் சல்மான் ஆகா.
இந்த ரன்அவுட் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி வங்கதேச வீரருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வீரர் சச்சினுக்கும் ஷோயப் அக்தர் இதற்கு முன்னால் இப்படி செய்து அவுட் செய்ததாகவும் கூறினார்.
இணையத்தில் வைரலாகும் வீடியோவில் பேசியிருக்கும் பாசித் அலி, “ஒரு கையால் தட்டினால் ஓசை வராது. இதுபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன. ஷகிப் அல் ஹசன் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு எதிராக இதைச் செய்தார், மேலும் 1999-ல் சோயிப் அக்தர் வேண்டுமென்றே சச்சின் டெண்டுல்கரை தடுத்துநிறுத்தினார். அப்போது பாகிஸ்தான் சச்சினை அவுட் என்று அறிவித்து வெளியேற்றி, அவரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்கவில்லை. அப்படி இருக்கையில் சல்மான் கிரீஸுக்கு வெளியே என்ன செய்து கொண்டிருந்தார்?" என கேள்வி எழுப்பினார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் சர்ச்சைக்குரிய ரன் அவுட்களில் முதலிடத்தில் இருப்பது 1999ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சச்சின் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட் செய்யப்பட்டது தான்.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 1999-ல் நடைபெற்ற ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா vs பாகிஸ்தான் அணிகள் விளையாடின. முதல் இன்னிங்ஸில் சச்சின் முதல் பந்தில் அக்தரின் பந்துவீச்சில் டக் அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் 3வது ரன் எடுக்க ஸ்டம்புகளுக்கு அருகில் சென்றபோது திடீரென அங்கேவந்த ஷோயப் அக்தருடன் மோதினார். 3வது நடுவர் க்ரீஸுக்கு உள்ளே வராத சச்சினுக்கு அவுட் கொடுத்தார். சச்சின் என்ன நடந்தது என குழப்பமடைந்து தலையை கீழே தொங்கவிட்டு வெளியேறினார். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள, சம்பவத்தை மீண்டும் பார்க்க டிரெஸ்ஸிங் ரூமுக்கு பதிலாக நேராக டிவி நடுவர்களின் அறைக்குச் சென்றார். கிரிக்கெட்டில் மிகப்பெரிய சர்ச்சைகளில் சச்சினின் இந்த ரன் அவுட்டும் ஒன்றாக இருந்துவருகிறது.
இந்த சர்ச்சை அதனுடன் முடியவில்லை, தங்கள் ஹீரோவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு இந்திய ரசிகர்களின் கூட்டம், "ஏமாற்று வேலை (Cheat), ஏமாற்று வேலை (Cheat)" என்று கோஷமிடத் தொடங்கியது, ஷோயப் அக்தர் லாங்-ஆன் ஃபீல்டிங்கிற்கு திரும்பியபோது பாட்டில்கள் மற்றும் பிற பொருட்களை அவருக்கு நேராக மைதானத்தில் ரசிகர்கள் எறிந்தனர். கோபமடைந்த கூட்டத்தை சமாதானப்படுத்த சச்சின் வெளியே வர வேண்டியிருந்தது. இருப்பினும், மறுநாள் கங்குலி அவுட்டான பிறகு நிலைமை மோசமாகியது, மைதானத்திற்குள் ஒரு முழுமையான கலவரம் வெடித்தது, அதனால் முழு மைதானமும் ரசிகர்களை வெளியேற்றப்பட்டு காலி செய்யப்பட வேண்டியிருந்தது. போட்டியின் இறுதி நாளில் கிட்டத்தட்ட காலியாக இருந்த மைதானத்தில் தான் போட்டி நடத்தப்பட்டது.