ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நடப்பு WTC சாம்பியனான ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.
அந்தப்போட்டியில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி இந்தியாவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் 104 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ராகுல் - ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கம் கொடுத்தது. ஜெய்ஸ்வால் 161 ரன்களும், ராகுல் 77 ரன்களும் அடித்தனர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியும் சதம் அடித்து அணிக்கு வலுசேர்த்தார். இதன் மூலம் 487 ரன்களுக்கு இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலியா 238 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. முடிவில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ஆட்ட நாயகனாக பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.. இவர் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தம் மொத்தம் 8 விக்கெட்களை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்த நிகழ்ச்சியில் (TNT Sport) இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெய்ஸ்டர் குக் மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீஃபன் பின் ஆகியோர் உரையாற்றினார்.
அப்போது பேசிய ஸ்டீபன் ஃபின், “ஜெய்ஸ்வால் 161 ரன்கள் என்ற மிகச்சிறந்த ஸ்கோரைப் ஸ்கோரைப் பதிவு செய்தார். ஆனால், நான் பார்க்க விரும்பியது மற்றும் உலகின் சிறந்த வீரர் என்று நான் நினைப்பது ஜஸ்பிரித் பும்ராதான். அவர் உண்மையில் மிகச்சிறந்த வீரர் (He is just—he's a joke, honestly). அவர் பந்துவீசுவதை நீங்கள் பார்க்கும்போதும், நல்லவேளை அவருக்கு எதிராக நாம் பேட் கட்ட வேண்டியதில்லை என நீங்கள் நினைப்பீர்கள்” எனத் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் இதுதொடர்பாக கூறுகையில், “சாதாரணமாக சென்று கிரிக்கெட் விளையாடுவதற்கே கடினமாக இருக்கும் ஆஸ்திரேலியவிற்கு ஆஸ்திரேலியாவையே அடித்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அது WACA மைதானம் அல்ல, பெர்த் கிரிக்கெட் மைதானம். இந்த மைதானம் புதியது என்பது எனக்குத் தெரியும்., ஆனால், அங்கு ஆஸ்திரேலியா பல ஆட்டங்களில் தோல்வி அடைந்திருக்கவில்லை. இந்தியா மிகவும் தைரியமான அணியென்று நினைத்தேன்” எனத் தெரிவித்தார். இந்தியா ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6 ஆம் தேதி அடிலெய்டில் நடக்கிறது.