krunal - patidar - bhuvaneshwar web
கிரிக்கெட்

’புவனேஷ்குமார், பட்டிதார், க்ருணால்’ என்ன பாவம் பண்ணாங்க..? தேர்வுக்குழுவை விளாசிய முன்னாள் வீரர்!

இந்திய அணியில் தொடர்ந்து புவனேஷ்குமார், ரஜத் பட்டிதார், க்ருணால் பாண்டியா போன்ற வீரர்கள் புறக்கணிக்கப்படுவது பேசுபொருளாக மாறியுள்ளது.

Rishan Vengai

2026 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்ட நிலையில், கவுதம் கம்பீர் தலைமையிலான தேர்வுக்குழு புதிய அணியை கட்டமைக்கிறது. ஆனால் ஐபிஎலில் தொடர்ந்து சிறப்பாக விளையாடும் புவனேஷ்குமார், ரஜத் பட்டிதார், க்ருணால் பாண்டியா ஆகியோருக்கு வாய்ப்பு இல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஷிஷ் நெஹ்ரா, கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் இந்த தேர்வை கேள்வி எழுப்புகின்றனர்.

2026 டி20 உலகக்கோப்பையை வென்றபிறகு வெற்றிக்கேப்டன் சூர்யகுமார் யாதவை அணியிலிருந்து நீக்கியதோடு மட்டுமில்லாமல், புதிய வீரர்களை கொண்டு அணியை கட்டமைக்கும் முயற்சியை கவுதம் கம்பீர் மற்றும் குழு செய்துவருகிறது. ஆனால் இந்த முயற்சியில் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் புவனேஷ்குமார், ரஜத் பட்டிதார் மற்றும் க்ருணால் பாண்டியா போன்ற வீரர்களின் பெயர்கள் பரிசீலினையில் கூட இல்லாதது விமர்சனத்தை பெற்றுள்ளது.

இங்கிலாந்து டி20 தொடரில் பெஞ்ச் செய்யப்பட்ட சஞ்சு சாம்சன், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். அந்தத்தொடருக்கான அணியில் கூட புவனேஷ்குமார், ரஜத் பட்டிதார் மற்றும் க்ருணால் பாண்டியா போன்றவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மாறாக ரிங்கு சிங், மயங் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

க்ருணால் பாண்ட்யா

இந்நிலையில் தான் ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

தன்னுடைய யூடியூப் சேனலில் பேசியிருக்கும் சீக்கா, “இந்திய அணி பிளாட்டான ஆடுகளத்தில் மட்டுமே அடிக்கக்கூடியவர்களா என்ற கேள்வி எழுகிறது. இந்த வீரர்களால் ஆடுகளத்தில் கொஞ்சம் பவுலர்களுக்கு சாதகமான விசயங்கள் இருந்தால் கூட விளையாட முடியவில்லை, கண்டிசனுக்கு ஏற்றார்போல் தங்களை தகவமைத்துக்கொள்ள முடியவில்லை. மாறாக திலக் வர்மாவிற்கு பதிலாக அக்சர் பட்டேலையும், ஷிவம் துபேவிற்கு பதிலாக ஹர்சித் ராணாவையும் முதலில் களமிறக்குகின்றனர்.

திலக் வர்மா இந்த அணியில் இருக்கக்கூடாது என்று பலமுறை கூறிவருகிறேன். அவருக்கு வேகமாக பந்துவீசும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக என்ன செய்யவேண்டும் என்ற க்ளூவே இல்லை. அதனால் தான் அவரை பாதுகாப்பதற்காக தாமதாக களமிறக்கினார்கள். என்னை பொறுத்தவரை திலக் வர்மா அணியில் இருக்கக்கூடாது. புவனேஷ்குமார், ரஜத் பட்டிதார், க்ருணால் பாண்டியா போன்ற வீரர்கள் என்ன பாவம் பண்ணாங்க?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் யஷ் தாக்கூர், மயங்க் யாதவ், ரிங்கு சிங் போன்றவர்களின் சலெக்சனையும் விமர்சித்துள்ளார்.