2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த வீரராக ஜோஸ் பட்லர் மட்டுமே இடம்பிடித்துள்ளார். லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித் ஆகியோர் அணியில் இல்லை. அதிகப்படியான ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 8ஆம் தேதிவரை நடைபெறவிருக்கிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 5 அணிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
நடப்பு சாம்பியனாக களமிறங்கவிருக்கும் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
2010 மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை சாம்பியன்களான இங்கிலாந்து அணி குரூப் சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி, நேபாள் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதிபெறக்கூடிய அணிகள் பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை உட்பட இங்கிலாந்து அணியும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் தான் 2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டியில் அனுபவம் வாய்ந்த மூத்தவீரராக ஜோஸ் பட்லர் மட்டுமே இடம்பிடித்துள்ளார். அதிரடி வீரர்கள் பிலிப் சால்ட், பென் டக்கெட் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
பந்துவீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். லெக் ஸ்பின்னர் அடில் ரசீத் அணியின் ஸ்பின் டிபார்ட்மெண்ட்டில் முன்னின்று வழிநடத்த உள்ளார். அதிகப்படியான ஆல்ரவுண்டர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக அணியில் 2 பேட்ஸ்மேன்கள், 6 ஆல்ரவுண்டர்கள், 3 விக்கெட் கீப்பர்கள், 4 பவுலர்கள் இடம்பெற்றுள்ளனர். கவனிக்கும்படியான வீரர்களாக வில் ஜாக்ஸ், ஜேக்கப் பெத்தெல், சாம் கரன், ஜேமி ஓவர்டன் போன்ற வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் 13 கோடி விலைபோன லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் அணியில் இடம்பெறவில்லை. மேலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணி தற்காலமானது என்றும், மாறுபாடுகளுக்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி:
ஹாரி ப்ரூக் (கேப்டன்), பில் சால்ட், ஜோஸ் பட்லர், பென் டக்கெட், ஜேக்கப் பெத்தெல், சாம் கரன், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், அடில் ரஷித்,ஜோஃப்ரா ஆர்ச்சர்,ரெஹான் அகமது, டாம் பான்டன், பிரைடன் கார்ஸ், லியாம் டாசன், ஜோஷ் டங், மற்றும் லூக் வுட்.