உலகக்கோப்பைக்கு முன் டிம் டேவிட்டுக்கு காயம்.. ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு!
2026 டி20 உலகக்கோப்பைக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர் டிம் டேவிட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவர் பிக்பேஸ் லீக்கிலிருந்து விலகியிருப்பதால், உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் வாய்ப்புகள் குறையலாம்.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் மார்ச் 8ஆம் தேதிவரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கவிருக்கிறது.
20 அணிகள் விளையாடவிருக்கும் நிலையில், நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒரு பிரிவில் 5 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி குரூப் பி-யில் இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஓமன் முதலிய அணிகளோடு இடம்பெற்றுள்ளது.
உலகக்கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணியில் பிரைம் ஃபார்மில் விளையாடிவரும் டிம் டேவிட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளது பின்னடைவாக மாறியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ள அணிகளாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பார்க்கப்படுகின்றன. பல முன்னாள் வீரர்கள் 2023 உலகக்கோப்பை போன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் இந்தியா வெற்றிபெறும் என கணித்துள்ளனர்.
இந்தசூழலில் இந்தியாவிற்கு வலுவான அணியாக ஆஸ்திரேலியா திகழும் என சொல்லப்படும் நிலையில், ஆஸ்திரேலியா டி20 அணியில் பேட்டிங்கில் ஜொலித்துவரும் அதிரடி வீரர் டிம் டேவிட்டுக்கு தற்போது காயம் ஏற்பட்டுள்ளது. தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் பிக்பேஸ் லீக்கிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருபுறம் வேகப்பந்துவீச்சாளர் ஹசல்வுட் காயத்தால் ஆஷஸ் தொடரிலிருந்து விலகிய நிலையில், டிம் டேவிட்டுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

