2008 - 2025 ஐபிஎல் வரை.. அதிகம் சம்பாதித்த வீரர்கள் யார்? யார்? டாப் 10 பட்டியல்!
10. தினேஷ் கார்த்திக் - 86.92 கோடி
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2013ஆம் ஆண்டு முதல் மற்றும் ஒரேயொரு ஐபிஎல் கோப்பை வென்ற தினேஷ் கார்த்திக், தன்னுடைய விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபினிஸிங் பேட்டிங் திறமையால் பல்வேறு அணிகள் விரும்பக்கூடிய வீரராக இருந்தார். அவருடைய ஸ்கில்ஸ் மற்றும் தலைமைப்பண்பு காரணமாக கொல்கத்தா முதலிய அணிகள் அவரை கேப்டனாக கூட நியமித்தனர்.
2024 ஐபிஎல் தொடரோடு ஓய்வை அறிவித்த அவர், 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையே வெல்லாத ஆர்சிபி அணியை பேட்டிங் பயிற்சியாளராக கோப்பைக்கு வழிநடத்தினார். அவருடைய இந்தப்பயணம் ஐபிஎல்லில் அவர் எந்தளவு மதிப்புமிக்க வீரராக இருந்தார் என்பதை எடுத்துக்காட்டுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை தினேஷ் கார்த்திக் 86.92 வரை சம்பாதித்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
9. ஷிகர் தவான் - 91.8 கோடி
ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2024 வரை நீண்ட காலம் விளையாடிய ஷிகர் தவான், விராட் கோலி, ரோகித் சர்மாவிற்கு பிறகு 6769 ரன்களுடன் அதிக ஐபிஎல் ரன்கள் அடித்த 3வது வீரராக ஜொலிக்கிறார். கன்ஸிஸ்டண்டாக ரன்களை அடிக்கக்கூடிய தொடக்க வீரரான தவான் டெல்லி, மும்பை, ஹைத்ராபாத், பஞ்சாப் கிங்ஸ் போன்ற பல அணிகளுக்கு விளையாடியுள்ளார். SRH அணிக்காக 2016ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பை வென்ற தவான், ஐபிஎல்லில் 91.8 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
8. கவுதம் கம்பீர் - 94.62 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக 2 ஐபிஎல் கோப்பை, பயிற்சியாளராக ஒரு ஐபிஎல் கோப்பை என வென்றுள்ள கவுதம் கம்பீர், ஐபிஎல் தொடரின் மதிப்புமிக்க கேப்டன்களில் ஒருவராக இருந்துவருகிறார். இதுவரை ஐபிஎல்லில் 94.62 கோடி ரூபாய் வரை கம்பீர் வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
7. ஏபி டி வில்லியர்ஸ் - 102.52 கோடி
டி20 கிரிக்கெட்டில் 360 டிகிரி பிளேயரான ஏபி டி வில்லியர்ஸ் ஐபிஎல்லில் எப்போதும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக இருந்துவருகிறார். ஐபிஎல்லில் முதல் 3 ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய டி வில்லியர்ஸ், ஓய்வு பெறும்வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடினார். துரதிருஷ்டவசமாக ஒரு கோப்பை கூட வெல்லாமல் டி வில்லியர்ஸின் சர்வதேச கிரிக்கெட்டும், ஐபிஎல் கிரிக்கெட்டும் முடிவுக்கு வந்தது. ஐபிஎல்லில் ஏபி டி வில்லியர்ஸ் சுமார் 102.52 கோடி வரை வருமானம் ஈட்டியதாக அறிக்கைகள் கூறுகின்றன.
6. சுனில் நரைன் - 107.25 கோடி
டி20 கிரிக்கெட்டில் பல மிஸ்ட்ரி ஸ்பின்னர்கள் வந்திருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்துவருபவர் வெஸ்ட் இண்டீஸின் சுனில் நரைன். அவருடைய பவுலிங் ஆக்சன் மீது குறைசொல்லப்பட்டாலும், அதை மாற்றியபிறகும் அவர் இன்னும் மிஸ்ட்ரி ஸ்பின்னராகவே வலம்வருகிறார். KKR அணியின் முக்கிய வீரராக ஜொலித்துவரும் சுனில் நரைன், அந்த அணி 3 முறை கோப்பை வென்றபோதும் அணியில் எக்ஸ் ஃபேக்டராக ஜொலித்தார். இதுவரை ஐபிஎல்லில் சுமார் 107.25 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
5. ரவீந்திர ஜடேஜா - 109 கோடி.
ஐபிஎல்லில் இருந்து பும்ரா, ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் போன்ற பல திறமையான வீரர்கள் இந்திய அணிக்கு கிடைத்திருந்தாலும், 2008ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே தன்னுடைய ஆல்ரவுண்ட் திறமையால கவனம் பெற்றவர் ரவீந்திர ஜடேஜா.
ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஷேன் வார்னேவால் திறமை கண்டறியப்பட்ட ஜடேஜா, இந்தியாவின் வெற்றிக்கேப்டன் தோனியின் தலைமையில் பட்டைத்தீட்டப்பட்டார். சென்னை அணியின் முக்கிய வீரராக தன்னை வளர்த்துக்கொண்டு சென்னை ரசிகர்களின் தளபதியாக மாறிய ஜட்டு, 2018, 2021 மற்றும் 2023 என சென்னை அணிக்காக 3 கோப்பைகளையும், ராஜஸ்தானுக்காக 2008-ல் ஒரு கோப்பையையும் வென்றுள்ளார். இதுவரை ஐபிஎல்லில் சுமார் 109 கோடி ரூபாய் வரை ஜடேஜா வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
4. சுரேஷ் ரெய்னா - 110.74 கோடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த சின்ன தல சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010ஆம் ஆண்டு முதல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். மேலும் 2011, 2018 மற்றும் 2021 என மொத்தமாக 4 ஐபிஎல் கோப்பைகளை சென்னை அணிக்காக வென்றுள்ளார். சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் சுமார் 110.74 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
3. விராட் கோலி - 173.2 கோடி
ஐபிஎல் தொடரின் 3 தூண்களில் ஒருவராக தோனி, ரோகித்தை தொடர்ந்து வலம்வருபவர் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டின் கோட்டாக இருந்துவரும் கிங் கோலி, இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் ஆளுமையாக இருந்துவருகிறார். தன்னுடைய வருமானத்தை கடந்து ஐபிஎல் தொடர் வருமானம் ஈட்டுவதில் கோலியின் பங்கு முக்கியமானதாக இருந்துவருகிறது. ஐபிஎல்லில் பல முறியடிக்கப்பட முடியாத சாதனைகளை குவித்துள்ள கோலி, ஆர்சிபி அணிக்காக முதல் ஐபிஎல் கோப்பையை 2025ஆம் ஆண்டு வென்றார். இதுவரை கோலி ஐபிஎல்லில் சுமார் 173.2 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
2. எம்.எஸ். தோனி - 176.84 கோடி
ஐபிஎல் என்றால் தோனி, தோனி என்றால் ஐபிஎல் என கூறும் அளவு, ஐபிஎல் தொடரின் மாபெரும் வளர்ச்சியில் தோனியின் பங்கு அசைக்கமுடியாததாக இருந்துள்ளது. அதனால் தோனியை ஐபிஎல்லில் மேலும் தொடரவைக்க வேண்டும் என்பதற்காக கைவிடப்பட்ட அன்கேப்டு பிளேயர் விதிமுறையை மீண்டும் கொண்டுவந்தது ஐபிஎல் நிர்வாகம். ஐபிஎல்லின் கோட்டாக இருந்துவரும் வெற்றிக்கேப்டன் மகேந்திர சிங் தோனி இதுவரை 5 கோப்பைகளை வென்றுள்ளார். மேலும் அதிக ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் கேப்டனாகவும் ஜொலிக்கிறார். இதுவரை தோனி ஐபிஎல்லில் சுமார் 176.84 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.
1. ரோகித் சர்மா - 178.6 கோடி
ஐபிஎல் தொடரில் 5 ஐபிஎல் கோப்பைகள் முதல் கேப்டன், பலம்வாய்ந்த சென்னை அணியை நாக்அவுட் போட்டிகளில் அதிகமுறை தோற்கடித்த ஒரே கேப்டன் என வலம்வருபவர் மும்பை இந்தியன்ஸின் ரோகித் சர்மா. சிறந்த அனலிடிக்கல் கேப்டனாக பார்க்கப்படும் ஹிட்மேன் ரோகித் சர்மா, ஐபிஎல் கோப்பையை வென்றதை தொடர்ந்து இந்தியாவிற்காகவும் கேப்டனாக இரண்டு கோப்பைகளை வென்று மதிப்புமிக்க வீரராக உருவெடுத்துள்ளார். இதுவரை ரோகித் சர்மா ஐபிஎல்லில் சுமார் 178.6 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டியுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

