இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என வென்ற இந்திய அணி இங்கிலாந்தை மொத்தமாக ஆட்டிப்படைத்தது.
அதற்குபிறகு தொடங்கிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றுவருகிறது.
முதல் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வென்று பதிலடி கொடுக்கும் எண்ணத்தில் களம்கண்டது இங்கிலாந்து அணி. இந்திய அணியில் விராட் கோலி மீண்டும் இடம்பிடித்தார்.
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதல் போட்டியை போலவே இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து ஓப்பனர்கள் பென் டக்கெட் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.
முதல் விக்கெட்டுக்கு 81 ரன்களை சேர்த்த தொடக்க ஜோடி வலுவான தொடக்கம் கொடுத்தது. அதற்குபிறகு வந்த அனைத்து இங்கிலாந்து வீரர்களும் இன்னிங்ஸை இறுதிவரை எடுத்துச்சென்றனர். டக்கெட் 65 ரன்கள், ஜோ ரூட் 69 ரன்கள், ஹாரி ப்ரூக் 31, பட்லர் 34 என அடிக்க, இறுதியில் அதிரடியாக விளையாடிய லிவிங்ஸ்டன் 41 ரன்கள் விளாசினார். 49.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவித்தது.
சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முதல் போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா, இரண்டாவது போட்டியிலும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த இரண்டு போட்டிகளிலும் 20 ஓவர்கள் வீசி வெறும் 2 பவுண்டரிகளை மட்டுமே கொடுத்துள்ளார் ஜடேஜா.
305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடவிருக்கிறது.