பும்ரா விளையாட மாட்டார்.. இந்தியாவின் சாம்பியன்ஸ் டிராபி கனவு அவ்ளோ தானா? வெளியான அதிர்ச்சி தகவல்!
பும்ரா - தற்போது பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பிறகு முதுகில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி 9 இன்னிங்ஸ்களில் 32 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இப்படி பும்ராவின் உடற்தகுதி கவலைக்குரிய வகையில் இருப்பது சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்தியாவிற்கு பெரிய பின்னடைவாக அமையவிருக்கிறது. என்னதான் பும்ரா நான் சொன்னால் தான் எனக்கு ஓய்வு என வெளியான தகவல்களுக்கு மறுப்பு கூறியிருந்தாலும், அவருடைய காயமானது அவ்வளவு லேசனதாக இருக்கவில்லை என்றே தகவல் வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஏற்கனவே இரண்டு அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டுவந்த முகமது ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பழைய ரிதமை எடுத்துவர முடியாமல் தடுமாறியது பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சாம்பியன்ஸ் டிராபிக்கு இரண்டு வாரங்களே மீதமுள்ள நிலையில், பும்ராவின் உடற்தகுதி கவலை என்பது இந்திய அணிக்கு பெரிய பிரச்னையாக மாறியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியில் பும்ரா விளையாட மாட்டார்..
2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஷமிக்கு ஏற்பட்ட காயத்தால் அவரால் ஒரு வருடத்திற்கு மேலாக அணிக்குள் திரும்பிவர முடியவில்லை. அவர் இல்லாத பற்றாக்குறையே இந்தியாவின் கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அந்தவகையில் பும்ராவையும் காயத்தோடு சாம்பியன்ஸ் டிரோபிக்கு அழைத்துச்சென்றால், அவரையும் ஒரு வருடத்திற்கு இந்தியா இழந்துவிடும் என அஸ்வின் உடனான உரையாடலில் பிடாக் தெரிவித்துள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் உடனான யூடியூப் உரையாடலில் பேசிய Pdogg எனக்கூறப்படும் பிரசன்னா அகோரம், ”பும்ராவிற்கு ஏற்பட்டிருக்கும் காயமானது அவரை சாம்பியன்ஸ் டிரோபியில் விளையாட அனுமதிக்கும் அளவு சாதாரணமானது இல்லை. அவரால் சாம்பியன்ஸ் டிரோபி மட்டுமல்ல, ஐபிஎல்லில் முதல் 4 போட்டிகளில் கூட விளையாட முடியாது. ஒருவேளை 4 ஓவர்கள் வீசவைக்கலாம் அல்லது பாதி ஓவர்கள் வீசவைக்கலாம் என அவரை அணிக்குள் எடுத்துச்சென்றால் காயம் அதிகமாகிவிடும். அதற்குபிறகு அவரை அடுத்த 8 மாதங்கள் வரை இந்திய ஜெர்சியில் பார்க்கமுடியாமல் போய்விடும். பும்ரா கண்டிப்பாக சாம்பியன்ஸ் டிரோபியில் விளையாட மாட்டார்” என தெரிவித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் தான் பங்கேற்பார் என்று தகவல் கிடைத்ததாகவும், அதில் அவருடைய உடற்தகுதியை பொறுத்தே மருத்துவக்குழு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார். பும்ரா அணியில் விளையாட வில்லை என்றால், ஷமியும் பெரிய ஃபார்மில் இல்லாதபோது இந்தியாவின் பந்துவீச்சு கவலை என்பது மிகப்பெரியதாக மாறிவிடும்.
மீதமிருக்கும் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரின் மீது பந்துவீச்சு பாரமானது அதிகமாக ஏற்றிவைக்கப்படும். அதைத்தவிர்த்து அவர்கள் இருவருமே கூட காயமடையக்கூடியவர்கள் என்பதால், இந்தியாவிற்கு மேலும் கவலை ஏற்படலாம். ஆனால் சாம்பியன்ஸ் டிராபியில் குறைவான போட்டிகள் என்பது இந்தியாவிற்கு சாதகமான சூழலை கூட ஏற்படுத்தலாம். பும்ராவிற்கு மாற்று பவுலராக சிராஜ் அணியில் சேர்க்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.