dinesh karthik - ashwin web
கிரிக்கெட்

இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்.. களத்திற்கு திரும்பும் அஸ்வின்!

ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரவிச்சந்திரன் அஸ்வினும் களத்தை பகிர்ந்துகொள்வார் என்ற தகவலும் கசிந்துள்ளது.

Rishan Vengai

ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் என்பது 11 வீரர்களுக்கு பதிலாக 6 வீரர்கள் கொண்ட அணிகள், 6 ஓவர்கள் கொண்ட போட்டியில் விளையாடும். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்தொடரில் இந்திய அணி 2005-ம் ஆண்டு கோப்பை வென்றது.

கடந்த 2024 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் உத்தப்பா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில், கேதார் ஜாதவ், ஸ்டூவர்ட் பின்னி, மனோஜ் திவாரி, ஷபாஸ் நதீம் மற்றும் பரத் சிப்லி முதலிய வீரர்கள் பங்கேற்றனர். பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் அடங்கிய குழுவில் இடம்பெற்ற இந்திய அணி, இரண்டு லீக் போட்டியிலும் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி கோப்பை வென்று அசத்தியது.

இந்நிலையில் 2025-ம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் வரும் நவம்பர் 7-ம் தேதி முதல் 9-ம் தேதிவரை டின் குவாங் சாலை பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறவிருக்கிறது.

இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்..

2025 ஹாங்காங் சிக்ஸஸ் தொடரின் இந்திய கேப்டனாக தினேஷ் கார்த்திக்கை வரவேற்பதாக ஹாங்காங் சிக்ஸஸ் தங்களுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இதுகுறித்த அவர்களுடைய பதிவில், "2025-ம் ஆண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக்கை வரவேற்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவரது சர்வதேச அனுபவம், கூர்மையான தலைமைத்துவ திறன்கள் மற்றும் அதிரடியான பேட்டிங் மூலம் போட்டிக்கு உத்வேகம் மற்றும் தீவிரம் இரண்டையும் தினேஷ் கார்த்திக் கொண்டு வருவார். கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டத்தை நாங்கள் நடத்துவதால் நவம்பர் 7–9 வரை ஹாங்காங்கில் எங்களுடன் சேருங்கள்" என்று பதிவிட்டுள்ளது.

அதேபோல இத்தொடரில் தினேஷ் கார்த்திக் தலைமையின் கீழ் அவருடைய நண்பரும் சகவீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினும் பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

32 ஆண்டுகளாக விளையாடப்பட்டுவரும் தொடரில் இந்திய அணி ஒருமுறை மட்டுமே கோப்பை வென்றுள்ள நிலையில், இம்முறை தினேஷ் கார்த்திக் தலைமையில் இந்தியா கோப்பை வெல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.