சஞ்சீவ் கோயங்கா - கேஎல் ராகுல் web
கிரிக்கெட்

கோயங்கா செய்த மோசமான செயல்..? மிகவும் சோர்வடைந்தேன்! - உண்மையை சொன்ன கேஎல் ராகுல்!

கேஎல் ராகுல் ஐபிஎல்லில் கேப்டனாக இருந்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.. அவர் மறைமுகமாக கோயாங்காவை தான் குறிப்பிடுகிறார் என நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர்..

Rishan Vengai

கேஎல் ராகுல், ஐபிஎல் கேப்டன்சியில் உரிமையாளர்களின் கேள்விகளால் சோர்வடைந்ததாக கூறியுள்ளார். கிரிக்கெட் பற்றிய புரிதலே இல்லாத கேள்விகள் அவரை மிகவும் சோர்வடையச் செய்ததாகவும், இது சஞ்சீவ் கோயங்காவை மறைமுகமாக விமர்சிப்பதாக நெட்டிசன்கள் கருதுகின்றனர்.

தோனியை விட ஸ்டீவ் ஸ்மித்தான் கேப்டன்சியில் சிறந்தவர் என கூறியது முதல், மைதானத்திலேயே கேஎல் ராகுலை அவமானம் செய்தது வரை சர்ச்சைகளுக்கு பெயர்போனவர் முன்னாள் ரைஸிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி மற்றும் தற்போதைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா.

சுமார் 7000 கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2022 முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது.. 2022 முதல் ஐபிஎல்லில் புதிய அணியாக இணைந்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, அப்போதைய கேப்டனான கேஎல் ராகுல் தலைமையில் 2022 மற்றும் 2023 என இரண்டு சீசனில் பிளே ஆஃப் வரை முன்னேறியிருந்தது.

கேஎல் ராகுல் - சஞ்சிவ் கோயங்கா

அதனைத்தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் லக்னோ அணி மோசமான பின்னடைவை சந்தித்தது.. அப்போது சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தபோது மைதானத்திலேயே வைத்து கேப்டன் கேஎல் ராகுலை அவமதித்து பேசினார் அணியின் உரிமையாளர் கோயங்கா.. சர்வதேச வீரருக்கு எதிராக மோசமாக நடந்துகொண்ட கோயங்காவின் செயலுக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்..

லக்னோ அணியில் அடைந்த மோசமான அனுபவத்திற்கு பிறகு 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியிலிருந்து வெளியேறிய கேஎல் ராகுல் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக தற்போது விளையாடிவருகிறார்.

ராகுல், கோயங்கா

இந்நிலையில் ஐபிஎல்லில் கேப்டன்சி குறித்து பேசியிருக்கும் ராகுல், 10 மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்பட்ட அழுத்தத்தை விட 2 மாத ஐபிஎல்லில் அதிக அழுத்தத்தையும், அதிகமாக சோர்வையும் கண்டதாக தெரிவித்துள்ளார்..

கிரிக்கெட் பற்றி தெரியாதவர்களின் கேள்வியால் சோர்வடைந்தேன்..

சமீபத்திய உரையாடல் ஒன்றில் ஐபிஎல்லில் கேப்டன்சி செய்தது குறித்து பேசியிருக்கும் கேஎல் ராகுல், கிரிக்கெட் பற்றிய புரிதலே இல்லாத உரிமையாளர்களின் கேள்விகள் அவரை மிகவும் சோர்வடையச் செய்ததாக கூறியுள்ளார்.. அவரின் இந்த பதில் கோயங்காவை தான் மறைமுகமாக விமர்சிப்பதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்..

இதுகுறித்து பேசியிருக்கும் கேஎல் ராகுல், ”10 மாதங்கள் சர்வதேச கிரிக்கெட் விளையாடிவிட்டு களைப்படைவதைவிட 2 மாதங்கள் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வுற்றேன்.. ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் இந்த மாற்றம், ஏன் அவர் அணியில் இன்று இல்லை. அவர்கள் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. அவர்களால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே களத்தில் அவர்களுடைய ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. என பல கேள்விகள் கேட்கப்பட்டன.

கேஎல் ராகுல்

இதுபோன்ற கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இடையில் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள், இதெற்கெல்லாம் பதிலளிக்க வேண்டியவர்கள் அவர்கள் தான், வீரர்களல்ல. வெற்றிக்கு இடையில் ஆடுகளம், எதிரணியின் பலம், பலவீனம் போன்ற காரணிகளும் இருக்கின்றன. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை.. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது” என்று பேசியுள்ளார்..

கேஎல் ராகுலின் இந்த பதில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை தான் குறிப்பிடுவதாக நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.