அடிலெய்டு மைதானம் விராட் கோலியின் கோட்டையாக இருந்துவருகிறது. இங்கு அனைத்து வடிவத்திலும் 5 சதங்கள், 4 அரைசதங்களுடன் 975 ரன்களை குவித்துள்ளார் கிங் கோலி..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
6 மாதங்களுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு ரோகித் மற்றும் கோலி திரும்பிய நிலையில், ஆஸ்திரேலியா தொடர் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது. இரண்டு பேரையும் சுற்றி ஆஸ்திரேலியா ஊடகங்கள் ஹைப்பை ஏற்றின.
ஆனால் பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் கோலி 0, ரோகித் 8 என ஏமாற்ற, அடிலெய்டில் நடக்கவிருக்கும் 2வது போட்டியில் கோலி மற்றும் ரோகித் கம்பேக் கொடுப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
அதிலும் விராட் கோலியின் விருப்பமான ஆஸ்திரேலியா ஸ்டேடியமாக இருந்துவரும் அடிலெய்டில் கோலி சதமடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் விராட் கோலி அனைத்து வடிவத்திலும் 12 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் உட்பட 975 ரன்கள் குவித்துள்ளார். அதில் இரண்டு ஒருநாள் சதங்களும் அடங்கும், அவருடைய பேட்டிங் சராசரி 65 ஆகும். இது மற்ற இந்திய பேட்ஸ்மேன்களை விட அதிகமாகும்..
ஒருமுறை அடிலெய்டு மைதானத்தில் டி20 போட்டியில் 90 அடித்து விராட் கோலி நாட் அவுட்டில் இருந்தபோது, தோனி அவரை புகழ்ந்து பேசினார்.
அப்போது பேசிய அவர், "அடிலெய்டில் கோலி எடுக்கும் ரன்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு ஸ்டாண்டிற்கு அவரது பெயரை வைப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர் தனது வாழ்க்கையை முடிக்கும் நேரத்தில், பல ஆஸ்திரேலிய மைதானங்கள் அவரது ஸ்டாண்டைக் கொண்டிருக்கும்" என்று தோனி புகழாரம் சூட்டினார்.
இந்த மைதானம் குறித்து பேசியிருந்த கோலி, "இந்த மைதானம் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் இந்த மைதானத்திற்குள் நுழையும் போதெல்லாம், ஏதோ ஒன்று என்னை பிணைத்து வைக்கிறது" என்று பேசியிருந்தார்.
2027 உலகக்கோப்பையில் விராட் கோலி விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி உலவும் நிலையில், தோனியின் கூற்றை மெய்யாக்கும் வகையில் கோலி ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது..