2026 ஐபிஎல்லில் தோனி இல்லாமல் ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே மீண்டும் மோசமான தொடக்கத்தால் 10வது இடத்தில் தள்ளாடுகிறது. திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தும், சரியான காம்பினேஷன், பவுலிங் பயன்பாடு இல்லாத கேப்டன்சியால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆர்சிபி போட்டிக்காவது மாற்றம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
மிடில் ஆர்டரில் சிக்ஸ் ஹிட்டிங் மெஷின் டெவால்ட் பிரெவிஸ், ஸ்டம்புகளுக்கு பின்னால் மாஸ்டர் மைண்ட் தோனி இல்லாமல் 2026 ஐபிஎல் தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுமோசமாகவே தொடங்கியுள்ளது. கடந்த ஐபிஎல்லில் எப்படி 10வது இடத்தில் முடித்தார்களோ, 2026-லும் அதே இடத்திலேயே தொடர்கின்றது ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி.
பல திறமையான வீரர்கள் அணியில் இருந்தும், அவர்களின் திறமையை சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரியாத கேப்டனாகவே ருதுராஜ் கெய்க்வாட் இதுவரை இருந்துவருகிறார். 5 கோப்பைகளை வென்ற OG சாம்பியன் அணியின் எதிர்காலம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் எப்படி இருக்கப்போகிறது என்பதே ஆபத்தான அறிகுறியாக தெரிகிறது.
முன்னாள் சென்னை வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூட, தன்னுடைய யூடியூப் சேனலில் சிஎஸ்கேவின் மோசமான செயல்பாடு குறித்து வேதனையுடன் பேசியிருந்தார்.
இந்தசூழலில் தான் ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை அணி சரியான பிளேயிங் 11 காம்பினேஷனுடன் களமிறங்கும் என்றும், பேட்ஸ்மேன்கள் சரியான இடத்திலும், பவுலர்கள் சரியான இடத்திலும் பேட்டிங் செய்வார்கள், பந்துவீசுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் சிஎஸ்கே ரசிகர்கள் இருந்துவருகின்றனர்.
2026 ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆயுஷ் மாத்ரே, சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, டெவால்ட் பிரெவிஸ் என சிறந்த டாப் 5 பேட்ஸ்மேன்களை கொண்டுள்ளது. ஆனால் அவர்களுடைய பவுலிங் யூனிட் நாதன் எல்லீஸ் காயத்தால் பலவீனமானதாகவே தெரிகிறது. இதனால் இருக்கும் பவுலிங் திறமையை சரியான இடத்தில் பயன்படுத்தி வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே இருந்துவருகிறது.
தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் கூட எப்போதும் சிறந்த பவுலிங் யூனிட் இருந்தது கிடையாது, மாறாக இருக்கும் வீரர்களின் திறமையை சரியான இடத்தில் பயன்படுத்தி வெற்றிபெறும் வித்தை தெரிந்தவர் மகேந்திர சிங் தோனி. ஒரு வீரர் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை அடுத்த போட்டியில் பெஞ்சில் அமரவைக்கும் கலாச்சாரம் தோனி தலைமையில் இருந்தது இல்லை. தொடர்ந்து 4 போட்டியில் தோற்றால் கூட அதே பிளேயிங் 11 உடன் சென்று வெற்றிபெறும் தன்னம்பிக்கையை தோனி கொடுத்தது போல், ருதுராஜ் கெய்க்வாட்டால் அணியில் கொடுக்க முடியவில்லை. அவர் ஆரம்பத்தில் இருந்தே டிஃபன்ஸிவ் கேப்டனாகவே செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஸ்பின்னர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஆடுகளத்தின் தன்மையையும் அவரால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு போட்டியில் நன்றாக விளையாடும் வீரரை அடுத்தப்போட்டியில் ஏன் டிராப் செய்கிறார் என்பது புரியாத புதிராகவே இருந்துவருகிறது.
இந்தசூழலில் தான் ஆர்சிபிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற டெவால்ட் பிரெவிஸ், உர்வில் பட்டேல், அகீல் ஹொசைன் மற்றும் ஃபார்மில் இருந்துவரும் ஓவர்டன் என 4 பேரையும் களமிறக்குங்கள் என்று சிஎஸ்கே ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்திட்டு வருகின்றனர். அகீல் ஹொசைன் பவர்பிளேவிலும் சிறப்பாக வீசமுடியும் என்பதாலும், உர்வில் பட்டேல், பிரெவிஸ் வந்துவிட்டால் மிடில் ஆர்டர் இன்னும் சிறந்ததாக மாறிவிடும், ஓவர்டன் இறுதியாக வந்து நல்ல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்றும் சென்னை ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துவருகின்றனர்.
ஆனால் வெற்றிபெற என்ன தேவையோ அதைசெய்யாமல் சொதப்பிவரும் ருதுராஜ் மற்றும் ஃபிளமிங் காம்போ ஆர்சிபிக்கு எதிராக என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.