சிஎஸ்கே, 2026 cricinfo
கிரிக்கெட்

CSK vs KKR| பழைய பன்னீர்செல்வமாக மிரட்டிய சிஎஸ்கே.. வேட்டையாடிய நூர், அகீல்! 2வது வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 2026 ஐபிஎல் தொடரில் தங்களுடைய 2வது வெற்றியை பதிவுசெய்தது.

Rishan Vengai

சேப்பாக்கில் ஸ்பின்னர்களை முழுமையாக பயன்படுத்திய சிஎஸ்கேவில், முதலில் 192 ரன்கள் குவித்த பின்னர் நூர் அகமது, அகீல் ஹொசைன் இணைந்து கேகேஆர் பேட்டிங்கை சிதறடித்து 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். தொடக்கத்தில் மூன்று தோல்விகள் கண்ட சென்னை, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து பழைய பன்னீர்செல்வம் போல மீண்டும் எழுந்துள்ளது. நூர் தனது ஐபிஎல் 50வது விக்கெட்டையும் பறித்தார்.

டெத் ஸ்பெசலிஸ்ட் பவுலர் இல்லை, மிடில் ஆர்டரில் அனுபவம் வாய்ந்த வீரர் இல்லை, சரியான ஃபினிசர் இல்லை என்ற குறைகளுடன் 2026 ஐபிஎல் தொடரில் காலடிவைத்த சென்னை அணிக்கு முதல் 3 போட்டியிலும் மரண அடி விழுந்தது.

சிஎஸ்கே, 2026

அணியின் காம்பினேசனில் குறைசொல்லப்பட்ட நிலையில், கடந்த 2 போட்டிகளாக சிறந்த பிளேயிங் 11 உடன் விளையாடிவரும் சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் தங்களுடைய 2வது வெற்றியை பதிவுசெய்து அசத்தியுள்ளது.

ஸ்பின்னர்களின் கோட்டையான சேப்பாக்..

எப்போதும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும் சென்னை சேப்பாக்கம் ஆடுகளமானது டி20 உலகக்கோப்பை தொடர் மட்டுமில்லாமல், நடப்பு ஐபிஎல் தொடரிலும் பேட்டிங் விக்கெட்டாக மாறியது. அது சென்னை அணிக்கு பாதகமாக அமைந்த நிலையில், நேற்றைய போட்டியில் ஸ்பின்னர்களுக்கு சாதகமாகவே பிட்ச் இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் டாஸை இழந்தார். டாஸ் வென்ற கேகேஆர் அணி சிஎஸ்கேவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது.

Sanju Samson

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் மோசமான ஃபார்மில் இருந்துவரும் ருதுராஜ் கெய்க்வாட் 6 பந்துக்கு 7 ரன்கள் அடித்து வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் மற்றும் ஆயுஷ் மாத்ரே இருவரும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். 6 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட மாத்ரே 38 ரன்னில் ஆட்டமிழக்க, 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என துவம்சம் செய்த சேட்டா சாம்சன் கார்த்திக் தியாகி பந்தில் போல்டாகி வெளியேறினார்.

KKR, 2026

அடுத்தடுத்து வந்த டெவால்ட் பிரேவிஸ் 41, சர்பராஸ் கான் 23 என அடிக்க 20 ஓவரில் 192 ரன்களை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சிறப்பாக பந்துவீசிய சுனில் நரைன், அனுகுல் ராய் மற்றூம் வருண் சக்கரவர்த்தி 3 ஸ்பின்னர்களும் 10 ஓவரில் 68 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.

வேட்டையாடிய நூர்அகமது, அகீல் ஹொசைன்..

193 ரன்கள் என்ற இலக்கு சென்னை அணிக்கு பத்தாதோ என்ற எண்ணம் எழுந்த நிலையில், அதிரடி வீரர் ஃபின் ஆலனை 1 ரன்னில் அவுட்டாக்கிய அன்ஷூல் கம்போஜ் சிறப்பான தொடக்கை ஏற்படுத்தி கொடுத்தார். 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அச்சுறுத்திய சுனில் நரைனை கலீல் அகமது வெளியேற்ற, அதற்குபிறகு களமிறங்கிய ஸ்பின்னர்கள், நூர் அகமது மற்றும் அகீல் ஹொசைன் இருவரும் கேகேஆர் அணியை திக்குமுக்காட வைத்தனர்.

இந்த இரண்டு ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாத கேகேஆர் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. ரஹானே 28, ரகுவன்ஷி 27, க்ரீன் 0, ரிங்கு சிங் 6 என அடுத்தடுத்து நடையை கட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் நூர் அகமது. சிறப்பாக வீசிய அகீல் ஹொசைன் 4 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை சாய்த்தார். சிஎஸ்கே ஃபீல்டர்கள் மீண்டும் ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டு பல கேட்ச்களை தவறவிட்டனர்.

அகீல் ஹொசைன், சிஎஸ்கே

கடைசியில் வந்து ரோவ்மன் பவல், ரமன்தீப் போராடினாலும் கேகேஆர் அணியால் 20 ஒவரில் 160 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. 3 தொடர் தோல்விகளுக்கு பிறகு 2 அடுத்தடுத்த வெற்றிகளை ருசித்த சிஎஸ்கே அணி பழைய பன்னீர்செல்வமாக திரும்பியுள்ளது. நூர் அகமது ஐபிஎல்லில் 50 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அணியில் ஃபீல்டிங் பெரிய குறையாக இருக்கும் பட்சத்தில், அதிலும் கம்பேக் கொடுத்தால் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் பெறும்..